You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம்"
பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.
இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு தங்களுக்கு விடுதலை அளிக்க முடிவெடுத்துவிட்டதால், தாங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டுமென்றும் நளினி ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அதன் இணைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் "தான் சட்டவிரோதமாக சிறையில் இருப்பதாகக் கூறி நளினி தாக்கல் செய்திருக்கும் மனு விசாரணைக்கு உகந்ததல்லை.
அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்துவிட்டது. பேரறிவாளன் கருணை மனு அளித்திருப்பதால், அது தொடர்பாக தமிழக ஆளுநர் சுதந்திரமாகவும் சட்டப்படியும் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: