You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய சந்தையில் களமிறங்கவுள்ள எலக்ட்ரிக் கார்கள் - விலை என்ன?
இந்தியாவின் சாலைகளில் எலக்ட்ரிக் கார்களின் ஆதிக்கத்தை காண இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால், எலக்ட்ரிக் கார்கள் குறித்து இந்திய மக்களிடையே நிலவும் ஆர்வத்தை புரிந்துகொண்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன.
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான கார்கள் கண்காட்சியில், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தைக்கான தங்களது பிரத்யேக எலக்ட்ரிக் கார்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
அவற்றில் சில முன்னணி நிறுவனங்களின் புதிய எலக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை காண்போம்.
மஹிந்திரா இகேயுவி100
இந்திய கார் சந்தையிலே மிகவும் விலை குறைந்த எலக்ட்ரிக் காராக கருதப்படும் இதன் விலை 8.25 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
40 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ள இந்த காரில், 15.9 kwh திறன் கொண்ட லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த காரை இயக்க முடியும்.
இதே கண்காட்சியில் மின்சாரத்தில் இயங்கும் எக்ஸ்யுவி ரக கார் ஒன்றையும் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியது. மஹிந்திரா இ-எக்ஸ்யுவி300 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரீமியம் ரக கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா எல்ஜி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து தயாரித்துள்ள பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 300 கிலோமீட்டர் வரை இயக்க முடியும் என்று கூறப்படுகிறது.
எம்ஜி மார்வல் எக்ஸ்
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் மார்வல் எக்ஸ் எனும் எலக்ட்ரிக் வாகனத்தை டெல்லி அருகே நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ளது.
இணையம், தானியங்கி இயக்கு வசதிகளுடன் கூடிய இந்த கார்தான் இந்த வகையில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் என்று இந்நிறுவனம் கூறுகிறது.
52.5 kwh திறன் கொண்ட இந்த காரின் பேட்டரியை 8.5 மணிநேரத்தில் சார்ஜ் செய்தவுடன், அதை கொண்டு 400 கிலோமீட்டர் வரை இயக்க முடியுமென்று எம்ஜி மோட்டார்ஸ் கூறுகிறது.
3.1 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைய கூடிய இந்த கார் எப்போது இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் இப்படித்தான் இருக்குமா?
தொழில்நுட்ப கருவிகளுக்கான கண்காட்சிகளை போன்றே கார்களுக்கான கண்காட்சியிலும் வருங்காலத்தில் சந்தையை ஆளப்போகும் வாகனங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும்.
அந்த வகையில், இந்த கண்காட்சியில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் தங்களது வருங்கால வாகனங்களின் மாதிரிகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
குறிப்பாக, மின்சார கார்களை பொறுத்தவரை, மாருதி சுஸுகி நிறுவனம் பியூச்சரோ-இ எனும் காரையும், கியா நிறுவனம் சோல் என்ற பெயரிலும், ரெனால்ட் நிறுவனம் கே-ஆர்இ என்ற காரையும், டாடா நிறுவனம் சியர்ரா என்னும் காரையும், வோல்க்ஸ்வேகன் ஐடி கிரோஸையும், மஹிந்திரா நிறுவனம் பன்ஸ்டர் எனும் காரையும் காட்சிப் படுத்தியுள்ளனர்.
பிற செய்திகள்:
- 'அமைச்சர் சொல்கிறார் என்பதால் பயந்துகொண்டு செருப்பை கழற்றினேன்' - பழங்குடியின சிறுவன்
- 'அல்-கய்தாவின் முக்கிய தலைவரை கொலை செய்துவிட்டோம்' - டிரம்ப்
- ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறதா ‘கியா’ கார் தொழிற்சாலை?
- இந்தியா மீதான விமர்சனம்: மகாதீர் தொனி மாறிவிட்டது என்கிறார் அன்வார் - காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: