You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: மூன்றாவதாக ஒருவர் கேரளாவில் பாதிப்புக்கு உள்ளானார்
கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இதனை அடுத்து கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் ஒரு இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதியானது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த இளைஞர் அண்மையில் சீனாவின் வுஹான் பகுதிக்கு சென்று வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்குகிறது ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம்.
இங்கு மட்டும் 294 பேர் கொரோனா வைரஸின் காரணமாக பலியாகி உள்ளனர்.
அந்த இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விவரிக்கிறது மத்திய அரசின் செய்திக் குறிப்பு.
எட்டே நாட்களில் மருத்துவமனை
வுஹான் பகுதியில் 1000 படுக்கைகள் கொண்ட ஹூஷென்ஷான் மருத்துவமனை எட்டே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவிவருவதை கட்டுப்படுத்த ஏற்படுத்த இரண்டு பிரத்யேக மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும்.
கேரள பெண்ணுக்கு கொரோனோ
முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றார்.
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் தென்படும் நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில்தான் கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: