“அன்று குஜராத் இன்று சோமாலியா” துரத்தும் வெட்டுக்கிளிகள் - நிஜ காப்பான் கதை மற்றும் பிற செய்திகள்

"அன்று குஜராத்; இன்று சோமாலியா" துரத்தும் வெட்டுக்கிளிகள் - நிஜ காப்பான் கதை

காப்பான் திரைப்படத்தில் விவசாயத்தை அழிக்க வெட்டுக்கிளிகளை ஊர் முழுவதும் அனுப்ப திட்டமிடும் ஒரு நிறுவனம். அண்மையில் குஜராத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலத்தைத் தாக்கின. அப்போது இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானால் அனுப்பப்பட்டவை என சில வலதுசாரி குழுக்கள் முணுமுணுத்தன.

இப்போது சோமாலியாவையும் இதுபோல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கி உள்ளன. விவசாய பயிர்களைத் திட்டமிட்டுத் தாக்குவதால் அந்நாடு இதனை தேசிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தி உள்ளது.

ஏப்ரலில் அங்கு அறுவடைக் காலம் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்று அந்நாட்டு விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சோமாலியாவை மட்டுமல்ல அதன் அண்டைநாடான எத்தியோப்பியா மற்றும் கென்யா விவசாய பயிர்களையும் வெட்டுக்கிளிகள் தாக்கி உள்ளன.

ஷாஹின்பாக் பெண்கள் போராட்டம்: நடுங்கும் குளிரில் 50 நாளாகத் தொடரும் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.

நடுங்கும் குளிர் கால இரவு ஒன்றில் ஷாஹின்பாக் போராட்டம் நடக்கும் தெருவை தேடிச் சென்றோம். கலைக்கூடங்களும், வணிக வளாகங்களும், காபிக் கடைகளும் நிரம்பிய நாங்கள் அறிந்த டெல்லியில் இத்தெருவை எங்கே பொருத்திப் பார்ப்பது என்று தெரியவில்லை. ஆனால், டெல்லி என்பது பாரம்பரியமாக ஒன்பது மாநகரங்கள் அடங்கிய மாநகரம். அல்லது அப்படி எங்களுக்கு சொல்லப்பட்டது. இந்த மாநகரின் மக்களில் பெரும்பாலானவர்கள் வேறு எங்கிருந்தோ வந்து குடியேறியவர்கள்.

"அமைதியான போராட்டங்கள் நடத்துவதற்கு ஆபத்தான இடமாக மாறி வருகிறது இந்தியா" -

அமைதியான போராட்டங்கள் நடத்த இந்தியா நாடு ஆபத்தான இடமாக மாறிவருகிறது என மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது. போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகள், துரோகிகள், தேச விரோதிகள் என கூறப்பட்டு, அடக்குமுறை சட்டங்களின்கீழ் பலர் கைது செய்யப்படுகிறார்கள் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிடுகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமல்ல. அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளதவர்கள் துரோகியாக முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பொதுமக்களும் அமைதியான போராட்டங்களை நடத்துகையில், கட்சி தலைவர்கள் போராட்டக்காரர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர், அதிகாரிகள் அமைதியான போராட்டக் காரர்களை பாதுகாக்க தவறியுள்ளனர் என அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறுகிறார்.

லண்டனில் "பயங்கரவாதம் தொடர்புடைய" சம்பவம் - பதற்றம்

லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த "பயங்கரவாதம் தொடர்பான" சம்பவத்தில் ஒரு நபர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுடப்பட்டதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனிலுள்ள ஸ்ட்ரியாத்தம் ஹை ரோடு எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர், ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலாளியால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

கொரோனா எதிரொலி: சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா முறை ரத்து

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் இ-விசா முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சீனாவுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவில் மட்டும் 300க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கு காரணமான கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: