You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறக்கிறது சீனா - விரிவான தகவல்கள்
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில், தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்து வருவதால் அந்நாட்டு அரசு ஒரு புதிய மருத்துவமனையை இதற்காக திறக்கவுள்ளது.
1000 படுக்கைகள் கொண்ட வுஹானின் ஹூஷென்ஷான் மருத்துவமனை எட்டே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவிவருவதை கட்டுப்படுத்த ஏற்படுத்த இரண்டு பிரத்யேக மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா மிகவும் போராடி வருகிறது.
சீனாவை தாண்டி முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தை சேர்ந்த இந்த 44 வயது நபர் அண்மையில் பிலிப்பைன்ஸ் வந்தார்.
சீனாவுக்கு வெளியே பதிவாகி உள்ள முதல் மரணம் இது என்கிறார் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
சீனாவுக்கு வெளியே இதுவரை 150 பேருக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது
சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டில் நுழைவதை பல நாடுகளும் தடை விதித்துள்ளன.
இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டின் குடிமக்களை பல நாடுகளும் தனிமைப்படுத்தி வைத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எப்படி சாத்தியமாக்கியது சீனா?
சீனா ஏற்கனவே குறுகிய காலத்தில் பல நினைவு சின்னங்கள் அமைத்து சாதனை படைத்துள்ளது என வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் மூத்த உறுப்பினர் யான்சோங் ஹுவாங் கூறுகிறார்.
மேலும் 2003ம் ஆண்டு பெய்ஜிங்கில் சார்ஸ் வைரஸ் பாதிப்பின்போது மருத்துவமனை ஒன்று ஏழு நாட்களில் கட்டப்பட்டது என குறிப்பிட்டார். அதேபோல வுஹானில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை முன்பே கட்டப்பட்ட கட்டுமானம் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.
இவ்வாறு மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான உரிமங்களையும், நிதி தேவைகளையும் சீன அரசாங்கம் சமாளித்துவிடும் என கூறப்படுகிறது.
சரியான நேரத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடிப்பதற்காக கட்டுமான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சீனா முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தனர் என ஹுவாங் தெரிவித்தார்.
இது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள:கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆறே நாளில் மருத்துவமனை கட்டும் சீனா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: