You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா? #BBCFactCheck
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதுவரை சீனாவில் மட்டும் 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அதன் பரவலை தத்தமது நாடுகளில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அது எங்கிருந்து, எப்படி உருவானது? என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு தெளிவான பதில் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதுதொடர்பாக பல செய்திகள் இணையத்தில் உலாவி வருகின்றன. எனவே, கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக பரவி வரும் இரண்டு விடயங்கள் குறித்த உண்மைத்தன்மையை பிபிசி தமிழ் ஆராய்ந்து.
கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக திகழும் சீனாவின் வுஹானில் எப்படி முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியது என்ற கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில், கொரோனா வைரஸை அமெரிக்காதான் திட்டமிட்டு பரப்பியது என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ் கிரிகாப் என்பவரின் ஃபேஸ்புக் பதிவை கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.
"தற்போது புதிய வைரஸ் என்று குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ் 2015ஆம் ஆண்டே ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது (2003 முதல் உருவாக்கப்பட்டு வந்தது). இதை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உதவியதாக அந்த காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த கண்டுபிடிப்பில் அமெரிக்க அரசுக்கு சில உரிமைகள் உள்ளன. இந்த காப்புரிமை காலாவதியான முதல் நாளில்தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறித்த முதல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டே வெளியிடப்பட்ட இந்த காப்புரிமை ஆவணத்தில் இந்த வைரஸுக்கு தடுப்பூசி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், இப்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறதா?" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள கிறிஸ், தான் குறிப்பிடும் காப்புரிமை குறித்த ஆவணத்தின் இணைப்பையும் இணைந்துள்ளார்.
கிறிஸ் அளித்த இணைப்பிலுள்ள காப்புரிமை தொடர்பான ஆவணத்தை ஆராயும்போது, அவரது கூற்று முற்றிலும் தவறாது என்று தெரிய வந்துள்ளது. அதாவது, கொரோனா என்ற பெயரிலுள்ள வைரஸ்கள் அனைத்தும் தற்போது சீனாவை உலுக்கி வரும் வைரஸே என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் இந்த கருத்து பதியப்பட்டுள்ளது.
2002 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் சீனாவை தாக்கிய சார்ஸ் எனும் வைரஸால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். உண்மையில் இந்த சார்ஸ் என்பதும் ஒருவகை கொரோனா வைரஸ்தான். இந்த சார்ஸ் வைரஸ் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை அறிக்கையில் கூட, கொரோனா வைரஸ் என்று எழுதப்பட்டு அடைப்பு குறிக்குள் SAARS-CoV என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா என்பது ஒரு வகை வைரஸ் குடும்பம். அதில் சார்ஸ் வகை, கொரோனா வைரஸ் 2003ஆம் ஆண்டும், அதைத்தொடர்ந்து 2004, 2005, 2012 உள்ளிட்ட ஆண்டுகளில் வேறுபட்ட கொரோனா வைரஸ்களும் கண்டறியப்பட்டன. இந்நிலையில், தற்போது சீனாவை மையாக கொண்டு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு நோவல் கொரோனா வைரஸ் என்று பெயர். எனவே, கிறிஸ் பதிவுக்கும் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் நோவல் கொரோனா வைரஸுக்குள் சம்பந்தமில்லை.
கொரோனா வைரஸை தடுக்கும் அருமருந்து உப்பா?
எப்போதெல்லாம் ஒரு நோய் பரவுகிறதோ அப்போதெல்லாம் அதை சரிசெய்வதற்கும், குறிப்பிட்ட நோய் தாக்காமல் இருப்பதற்கும் தீர்வாக மிகவும் எளிய விடயங்கள் முன்வைக்கப்படுவது வழக்கமான ஒன்றே.
அந்த வகையில், தற்போது சீனாவின் அனைத்து பிராந்தியங்களிலும், உலகின் 16க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவிலுள்ள கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு மக்கள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலே போதும் என்ற தகவல் சீனாவின் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
"நாசித்துளை வழியாக முதலில் ஒருவரது உடலில் நுழையும் வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் குரல்வளையில் பதுங்கியிருக்கும். எனவே, நீர்த்த உப்பு நீர் பயன்படுத்தும்போது, தொற்றுநோயை ஏற்படுத்துவதற்கு முன்பே பாக்டீரியா கொல்லப்பட்டு விடும். மருத்துவமனைகள் அல்லது பிற பொது இடங்களுக்கு செல்வதற்கு முன்பு எல்லோரும் நீர்த்த உப்பு நீரில் கொப்பளிக்கவும். வீடு திரும்பியதும் மீண்டும் அதே வழிமுறையை பின்பற்ற பரிந்துரைக்கிறேன்" என்று சீனாவின் பிரபல மருத்துவர் ஒருவர் கூறியதாக குறிப்பிட்டு பரப்பப்பட்டு வரும் அந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வீபோ சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ள சீனாவின் குவாங்சு மருத்துவ பல்கலைக்கழகம், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த கூற்று முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது.
"புதிய கொரோனா வைரஸை உப்பு நீர் கொல்லும் என்று தற்போதைய கண்டுபிடிப்புகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து வதந்தியை நம்பவோ பரப்பவோ வேண்டாம்" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தகவல் தவறாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. "நீர்த்த உப்பு நீரில் வாயை கொப்பளிப்பது, இந்த நோயிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்பதற்கு உறுதியான எந்த ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: