You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் மீண்டும் வெடித்த துப்பாக்கி: இப்போது ஷாஹின்பாக் பகுதியில்...
டெல்லி ஷாஹினபாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் 49-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனடியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் துணை காவல் ஆணையர் சின்மயி பிஸ்வால் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ.செய்தி முகமை.
அந்த நபர் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே அந்த நபரின் பெயர் கபில் குஜ்ஜர் என்றும், அவர் நொய்டா எல்லை அருகே உள்ள தல்லுபுரா கிராமத்தை சேர்ந்தவர் என்றும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
அந்த நபரை போலீசார் அழைத்துச் செல்லும் காட்சியையும் ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் காலி துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்புதான், டெல்லி ஜாமியா மில்லியா பகுதியில் காந்தி சமாதியை நோக்கி ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது பள்ளி மாணவர் என்று கூறப்படும் நபர் துப்பாக்கியால் சுட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து, "தேச துரோகிகளை..." என்று முழங்க... கூட்டம் "சுட்டுத் தள்ளு" என்று பதில் முழக்கம் செய்தது. இப்படி பல முறை அமைச்சர் முழங்க அதே பதில் முழக்கத்தை கூட்டமும் தொடர்ந்தது. இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
ஜாமியா மில்லியா துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அமைச்சரின் பேச்சே தூண்டுதலாக அமைந்தது என்று பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், மீண்டும் தலைநகர் டெல்லியிலேயே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஒரு போராட்டத்திலேயே ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- ‘பூமி திருத்தி உண்’ - நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய ஆத்திசூடியின் பொருள் என்ன?
- நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு
- சார்ஸை விஞ்சிய கொரோனா - சீனா சென்றவர்களுக்கு அமெரிக்காவில் தடை - 10 தகவல்கள்
- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது பிரிட்டன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: