பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளை: விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் உதவுமா?

பரனூர் சுங்கச்சாவடி

கடந்த வாரம் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த தகராறின்போது, பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து, அன்று கொள்ளைபோன வசூல் பணத்தை எடுத்தது யார் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

சென்னை நகரத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல பலரும் கடக்கும் பரனூர் சுங்கச்சாவடியில், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், சுங்கக்கட்டணம் செலுத்தவேண்டும் என சுங்கச்சாவடி அலுவலர் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

News image

பரனூர் சாலையில் மற்ற வாகனங்கள் செல்லாதவாறு, சுங்கச்சாவடியின் குறுக்கே பேருந்தை ஓட்டுநர் நாராயணன் நிறுத்தியதால், சுமார் ஐந்து மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாக்குவாதம் முற்றியநிலையில், பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநருக்கு ஆதரவாகப் பேசினர். பொதுமக்களுக்கும், சுங்கச்சாவடி அலுவலர்களுக்கும் இடையில் நடந்த வன்முறையில், சுங்கச்சாவடியின் 12 சாவடிகளையும், பொதுமக்கள் சேதப்படுத்தினர். இதற்கிடையில், சுங்கச்சாவடியில் அன்று வசூலான பணமும் கொள்ளைபோனது.

சுங்கச்சாவடியில் இருந்த பல சிசிடிவிகளும் சேதப்படுத்தப்பட்டதால், பணத்தை கொள்ளையிட்டது யார் என உடனடியாக தெரியாமல் இருந்தது. தற்போது ஒரு சில காட்சிகள் மட்டும் கிடைத்துள்ளதால், அந்த காட்சிகளை வைத்து பணத்தை கொள்ளையிட்டது யார் என விசாரணை நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரனூர் சுங்கச்சாவடி

பேருந்து ஓட்டுநர் நாராயணன் மற்றும் சுங்கச்சாவடி அலுவலர்கள் என நான்கு பேரை வன்முறை சம்பவத்திற்குப் பிறகு காவல்துறை கைது செய்தது. மேலும் சுங்கச்சாவடியில் பணியில் இருப்பவர்களிடமும் கொள்ளை போன பணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை சம்பவம் நடந்தது குறித்தும், பணம் கொள்ளைபோனது குறித்தும், வழக்கு பதிவுசெய்துள்ள விசாரணை அதிகாரிகள், கொள்ளை போன பணம் கட்டாயம் மீட்கப்படும் என தெரிவித்தனர்.

பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த வன்முறை காரணமாக கடந்த ஒருவார காலமாக வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: