வாட்ஸ்ஆப்: இன்றிலிருந்து லட்சக்கணக்கான செல்ஃபோன்களில் இயங்காது? ஏன் தெரியுமா?

வாட்ஸ்ஆப்

பட மூலாதாரம், Getty Images

இன்றிலிருந்து (பிப்ரவரி 1) பல லட்சக்கணக்கான திறன்பேசிகளில் மெசேஜிங் சேவை அளித்து வரும் வாட்ஸ்ஆப் இயங்காது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி செயல்படாது.

News image

வாட்ஸ்ஆப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

இந்த அப்டேட் யாருக்கெல்லாம் பிரச்சனை?

ஆண்ட்ராய்ட் திறன்பேசியில் 2.3.7 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் வாட்ஸ்ஆப் செயலி இன்றுமுதல் இயங்காது.

பரவலான பயன்பாட்டில் இல்லாத இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த சேவையை வாட்ஸ்ஆப் நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்த இயங்குதளங்கள் பொதுவாக எந்தவொரு புதிய கருவியில் நிறுவவோ அல்லது அப்டேட்டோ செய்யப்படுவதோ கிடையாது.

ஒருவேளை வாட்ஸ்ஆப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய திறன்பேசிகளின் இயங்குதளங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

எனினும், ஐபோன் 4எஸ் போன்ற சில கருவிகள், ஐஓஎஸ் 7 பதிப்பை மட்டுமே நம்பி இயங்கும் சூழலில் அந்த கருவிகளில் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது.

வாட்ஸ்ஆப்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்ஆப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க அந்நிறுவனத்துக்கு இதைத்தவிர்த்து வேறு வழியில்லை என்று கூறும் சிசிஎஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தில் தரவுகளை ஆய்வு செய்யும் பென் வுட், வாட்ஸ்ஆப்பின் இந்த அறிவிப்பால் பழைய திறன்பேசிகளில் செயலி இயங்காது என்பது கடினமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறார்.

வாட்ஸ்ஆப்பின் இந்த நடவடிக்கை செயலியை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக பழைய இயங்குதளங்களை கொண்டுள்ள திறன்பேசி சந்தையில் இந்த தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தசாப்தத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் வாட்ஸ்ஆப், ஏற்கனவே 2017ஆம் ஆண்டு அதன் பயனர்களுக்கு சேவை நிறுத்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

"இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு எங்களுக்கு கடினமாகத்தான் இருந்தது. ஆனால், எங்களுடைய பயனர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் சிறந்த முறையில் தொடர்பில் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் செயலியை சிறப்பாக வைத்திருக்கும்" என்று வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் இதற்கு முன்பாக, 2016ல் பல திறன்பேசிகளிலிருந்து அதன் சேவையை விலக்கிக் கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு விண்டோஸ் திறன்பேசிகளில் வாட்ஸ் ஆப் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: