செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்: நடந்தது என்ன? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், தினத்தந்தி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்
செங்கல்பட்டு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், சுங்கச்சாவடியை அந்த வழியாக வந்த பஸ் பயணிகள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இங்கு தமிழ் தெரிந்த உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்தினால் கட்டணம் செலுத்தாமல் செல்வதை தடுக்கவே வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூல் செய்கின்றனர்.

பட மூலாதாரம், Facebook
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று பரனூர் சுங்கச்சாவடியில் வந்து நின்றது. அப்போது அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்பவருக்கும் இடையே கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே சுங்கச்சாவடி ஊழியர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் திடீரென்று பஸ்சை சுங்கச்சாவடியில் ஒரு வாசலில் குறுக்கே நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, பஸ்சில் இருந்து இறங்கி வந்த பயணிகள் டிரைவருக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து ஊழியர்களும் ஒன்றுதிரண்டு வந்து பஸ் பயணிகளிடம் தகராறு செய்தனர்.
இதனால் சுங்கச்சாவடியை நோக்கி வந்த வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மேற்கொண்டு அவை நகர முடியாதபடி முண்டி அடித்ததில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த மற்ற அரசு பஸ் டிரைவர்கள் சுங்கச்சாவடிக்கு வந்து தாக்கப்பட்ட பஸ் டிரைவருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.
மேலும் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகள் பெரும்பாலானோர் ஒன்று கூடி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். அதன் பின்னர், அங்கிருந்த அனைத்து சுங்கச்சாவடியின் கண்காணிப்பு கேமராக்களையும், கண்ணாடிகளையும் உடைத்து நொறுக்கினர். மேலும், இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடியை அவர்கள் தீ வைத்து எரித்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதை அறிந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தை தடுக்க முயன்றும், முடியாததால், ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்ததை அடுத்து, பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று முழுவதும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஆளில்லாமல் அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்து தமிழ் திசை: சாம்பார் வெங்காயம் விலை ரூ.60 ஆக குறைந்தது

பட மூலாதாரம், Getty Images
கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.60 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.200 வரை உயர்ந்திருந்தது. பெரிய வெங்காயம் விலை உயர்வால் சின்ன வெங்காயத்தின் பயன்பாடு அதிகரித்த நிலையில், அதன் விலையும் ரூ.200 வரை உயர்ந்திருந்தது. தற்போது பெரிய வெங்காய வரத்து அதிகரித்து அதன் விலை கிலோ ரூ.40 ஆக குறைந்துள்ளது. அதேபோன்று சாம்பார் வெங்காயம் வரத்து அதிகரித்து அதன் விலையும் ரூ.60 ஆக குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான தக்காளி, கத்தரிக்காய் தலா ரூ.20, உருளைக் கிழங்கு, பாகற்காய் தலா ரூ.25, அவரைக்காய் ரூ.40, வெண்டைக் காய் ரூ.35, முள்ளங்கி, பச்சை மிளகாய், முட்டைக்கோஸ் தலா ரூ.10, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.12, புடலங்காய் ரூ.15, முருங்கைக்காய் ரூ.140 என விற்கப்படுகிறது.
சாம்பார் வெங்காயம் விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, "திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அப்பகுதிகளில் இருந்து தற்போது சின்ன வெங்காயம் அதிக அளவில் கோயம்பேடு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்ட சின்ன வெங் காயம் நேற்று ரூ.60-க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் விலை மேலும் குறைய வாய்ப் புள்ளது" என்றனர்.

தினமணி: "கரோனா வைரஸ்: கண்காணிக்கிறது இந்தியா"

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியா்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சீனாவில் இதுவரை 56 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 1,975 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக வூஹான் நகரில் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில், சுட்டுரையில் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், 'சீனாவில் உள்ள இந்தியா்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. களநிலவரம் தொடா்பான தகவல்களை, இந்தியத் தூதரகத்தின் சுட்டுரை பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'வூஹான் உள்பட ஹுபே மாகாணத்தில் உள்ள இந்தியா்களுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. இந்தியா்கள் குறிப்பாக மாணவா்களின் உடல்நலம் குறித்து கண்காணித்து வருகிறோம். இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா்களுக்காக இரு உதவி எண்கள் (+8618612083629, +8618612083617) ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இப்போது மூன்றாவதாக +8618610952903 என்ற எண்ணையும் தொடங்கியுள்ளோம். தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து இந்தியா்கள் இந்த எண்களில் தொடா்பு கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
'மாணவா்களின் கவலைகளுக்கு தீா்வு காண ஆலோசனை': வூஹான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் சுமாா் 700 இந்திய மாணவா்கள் பயின்று வருகின்றனா். தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக, அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேறவோ, அங்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால், வூஹான் நகரில் மாணவா்கள் உள்பட சுமாா் 250 போ் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடா்பாக, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மாணவா்கள் முன்வைத்துள்ள கவலைகளுக்கு தீா்வு காண்பதற்கான வாய்ப்புகள் குறித்து சீன அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் இல்லத்தை தாக்க முயற்சி
மயிலாப்பூர் வரதராஜபுரத்தில் அமைந்துள்ள துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தியின் இல்லத்தில் ஐந்து மர்ம நபர்கள் உள்ளே நுழைய முயற்சித்ததாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மர்ம நபர்கள் ஏன் வீட்டிற்குள் வர முயற்சி செய்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் மொத்தம் 9 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து குருமூர்த்தியின் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு பைக்குகளில் வருகின்றனர். ஆனால் ஒரு பையுடன் வீட்டிற்கு அருகில் 5 நபர்கள் மட்டுமே வருகின்றனர்.
நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டவுடன், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் வெளியில் வந்துள்ளனர். காவல்துறையினரை கண்டவுடன் அங்கிருந்த மர்ம நபர்கள் கொண்டு வந்த பையுடனே பைக்கில் ஏறி தப்பியதாக கூறுகின்றனர்.
இது குறித்து சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், சிசிடிவி கேமரா பதிவில் ஒன்பது நபர்கள் ஐந்து பைக்குகளில் தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன .ஆனால் வீட்டிற்கு அருகே வந்தது ஐந்து நபர்கள் மட்டுமே என்று தெரியவந்தது. மர்ம நபர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார். ஏற்கனவே 2013ம் ஆண்டு குருமூர்த்தியின் இல்லம் தாக்கப்பட்டது'' என்றும் விஸ்வநாதன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













