You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து கடவுள் சிலை கடத்தல்: நாகையில் மீட்கப்பட்ட கோயில் சிலைகள் திருடப்பட்டது எங்கே?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி மாதத் துவக்கத்தில் சோழர் காலச் சிலை ஒன்றும் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதியன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் செல்வம், பைரவசுந்தரம் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.
இந்த பத்து சிலைகளில் ஒன்றரை அடி உயரமுள்ள சிவகாமசுந்தரி சிலையும் ஒன்று. இந்தச் சிலையை கைதுசெய்யப்பட்ட செல்வம் என்பவர், சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுவந்தார்.
இந்தத் தகவல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்குத் தெரிந்ததையடுத்து செல்வம் முதலில் கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு, அவருடைய கூட்டாளியான பைரவசுந்தரமும் கைதுசெய்யப்பட்டார்.
இதில் ஒருவருடைய வீட்டை சோதனையிட்டதில் இரண்டு நடராஜர் சிலை, ஒரு விநாயகர் சிலை, இரண்டு அம்மன் சிலைகள் உட்பட மேலும் ஒன்பது சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதில் பைரவசுந்தரம் கோயில் ஒன்றில் குருக்களாகவும் பணியாற்றிவருகிறார் என்பது தெரியவந்தது.
சிவகாமசுந்தரி சிலையை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்க முயன்றவர்கள், சற்று பழையதாகத் தோற்றமளித்த ஒரு நடராஜர் சிலையை 30 லட்ச ரூபாய்க்கு விலைபேசி வந்தனர்.
இந்தச் சிலைகள் இவர்கள் கைக்கு எப்படி கிடைத்தது என்ற விசாரணையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தற்போது ஈடுபட்டிருக்கிறது. சிவகாமசுந்தரி மற்றும் நடராஜர் சிலைகளைத் தவிர்த்த பிற சிலைகள் சமீப காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டிருக்கின்றன.
கைப்பற்றப்பட்ட சிவகாமசுந்தரி சிலை, பஞ்சலோகத்தால் 1948ல் செய்யப்பட்டதென தெரியவந்திருக்கிறது. இதற்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சிலை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பூண்டியில் இருக்கும் கோயிலில் இருந்து 2014ஆம் ஆண்டில் திருடப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. மீதிச் சிலைகள் எப்படி இவர்களுக்குக் கிடைத்தன என்பது விசாரிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையில், ஜனவரி மாத துவக்கத்தில் ஆத்தூர் அருகே உள்ள கங்கவல்லி என்ற ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் மிகப் பழமையான அம்மன் சிலை இருப்பதாகத் தெரியவந்து, அதனையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
இந்தச் சிலையை ராஜசேகர் சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்துள்ளார்.
பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலை பிற்காலச் சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே, எந்தக் கோயிலிலாவது இதுபோல அம்மன் சிலை ஒன்று காணாமல் போயிருந்தால் தெரிவிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது.
"சிலை கடத்தலில் ஈடுபடும் பெருந்தலைகள் கைதுசெய்யப்பட்டுவிட்டாலும் வேறு சிலர் முளைத்துக்கொண்டே இயிருக்கிறார்கள். தற்போது 285 சிலை திருட்டு, சிலை காணாமல் போன வழக்குகள் இருக்கின்றன. இவற்றில் 106 வழக்குகளில் துப்பு ஏதும் கிடைக்காமல் இருந்த நிலையில், தாமரைப்பூண்டி கோயிலில் காணாமல் போன சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிற சிலைகளும் தேடப்பட்டு வருகின்றன" என பிபிசியிடம் கூறினார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி. அன்பு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: