ரஜினி-பெரியார் சர்ச்சை : மீண்டும் மறு பிரசுரம் செய்யப்பட உள்ள 1971ஆம் ஆண்டு துக்ளக் கட்டுரை

1971ஆம் ஆண்டு நடைபெற்ற தி.கவின் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் குறித்து அப்போதைய துக்ளக் இதழில் வெளிவந்த செய்தியை மீண்டும் மறுபிரசுரம் செய்ய இருப்பதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,`` பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும் படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம்.``என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக,துக்ளக் விழாவில் பெரியார் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்த கட்டுரையை ஆதாரமாக வைத்தே தான் பேசியதாகவும் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் தெரிவித்த அவுட்லுக் கட்டுரையில் திகவின் ஊர்வலம் பற்றியோ, இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது பற்றியோ எந்த புகைப்பட ஆதாரங்களும் இடம்பெறவில்லை என பெரியார் இயக்கங்கள் தெரிவித்தன.

மேலும், சமூக வலைத்தளங்களில் சேலம் ஊர்வலம் குறித்து பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.

மேலும், ``தமிழக கடவுளர்களை திராவிட கழகத்தினர் அவமதித்தது குறித்த செய்தி வெளியிட்ட குறிப்பிட்ட துக்ளக் இதழ் அன்றைய திமுக அரசால் பறிமுதல் செய்யப்பட்டது என ரஜினிகாந்த் கூறுகிறார். இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட இதழ் பல மடங்கு விலைக்கு கருப்பு சந்தையில் விற்பனையானது எனவும் தெரிவிக்கின்றார். அப்படியென்றால் அந்த துக்ளக் புத்தகத்தையே அவர் ஆதாரமாக காட்டலாமே? ஏன் அவுட்லுக் கட்டுரையை காட்டுகிறார்?``எனவும் பெரியார் இயக்கங்கள் கேள்வி எழுப்பி வந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: