You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினி- பெரியார் சர்ச்சை: ``அவுட்லுக்கில் நான் எதை ஆதாரமாக வைத்து எழுதினேன்?``
- எழுதியவர், எம்.செந்தில்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
செவ்வாய்கிழமையன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் 1971 ஊர்வலம் குறித்து தான் பேசியது பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் என்றும் கற்பனையாக ஏதும் பேசவில்லை என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக மன்னிப்பு ஏதும் கேட்க முடியாது என்ற அவர், தனது பேச்சுக்கு அவுட்லுக் கட்டுரை ஒன்றையும் ஆதாரமாக காட்டினார்.
2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக தமிழக அரசை விமர்சித்து பத்திரிக்கையாளர் பாலா வரைந்த கார்ட்டூனுக்காக அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக வரலாற்றில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அவுட்லுக் பத்திரிக்கையில் `The Tamil Gag Raj' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை பத்திரிக்கையாளர் ஜி.சி.சேகர் எழுதியிருந்தார்.
அந்த கட்டுரையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த புகைப்படங்களை பிரசுரித்த துக்ளக் பத்திரிக்கை மீதும், அதன் ஆசிரியர் சோ ராமசாமி மீதும் தமிழக அரசு அடக்குமுறைகளை கையாண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல்களை ஆதாரமாக கொண்டே துக்ளக் விழாவில் தான் பேசியதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி கூறினார். ஆனால் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி குறித்த எந்தவித புகைப்படங்களும் இடம்பெறாமல் வெளியான அவுட்லுக் கட்டுரையை எப்படி ஆதாரமாக நம்ப முடியும் என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் அவுட்லுக் பத்திரிக்கையில் குறிப்பிட்ட அந்த கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஜி.சி.சேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
``பல ஆண்டுகளுக்கு முன்பு நான் டெலிகிராஃப் பத்திரிக்கையில் பணிபுரிந்த போது, சோ அவர்களை பேட்டிக்காக சந்தித்தேன். அப்போது தனது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர், 1971-ஆம் ஆண்டு பெரியார் ஊர்வலம் குறித்த புகைப்படங்களை துக்ளக்கில் வெளியிட்டதால் சந்தித்த பிரச்சனைகளை குறிப்பிட்டார். மேலும் அந்த ஊர்வலம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டதால் தடை செய்யப்பட்ட துக்ளக் இதழின் ஒரு பிரதியையும் துக்ளக் அலுவலகத்தில் பார்த்தேன்.`` என கூறினார்.
மேலும், பெரியார் குறித்த பேச்சுக்கு தன்னுடைய கட்டுரையை மட்டும் ரஜினிகாந்த் ஆதாரமாக காட்டவில்லை என்பதை அவருடைய பேட்டியை கூர்ந்து கவனித்தால் புரியும் எனவும் அவர் கூறினார்.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது என்ன?
துக்ளக் இதழின் 50வது நிறைவு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.`` என பேசினார்.
இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். பத்திரிகை 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் துக்ளக்கை பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று குறிப்பிட்டார்.
இன்னொரு சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் அறிமுகமாகியிருந்த சோவை, இந்தியா முழுக்க பிரபலமானார்.``என்று பேசினார்.
திராவிடர் கழகம் என்ன சொல்கிறது?
பெரியார் தலைமையில் இயங்கிய திராவிடர் கழகம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை 1971ஆம் ஆண்டு ஜனவரி 23- 24ஆம் தேதிகளில் சேலம் போஸ் மைதானத்தில் நடத்தியது. தொழிலதிபர் ஜி.டி. நாயுடு அந்த மாநாட்டைத் திறந்து வைத்தார்.
மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 24ஆம் தேதியன்று மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. ராஜேந்திரா சத்திரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் மூடநம்பிக்கையை விளக்கும் வகையிலான காட்சிகளைக் கொண்ட ட்ரெக்குகளும் இடம் பெற்றன. இந்துக் கடவுள்களின் படங்களைக் கொண்ட டிரெக்குகளும் இதில் வந்தன. இந்த நிகழ்வில் நடந்தது பற்றிதான் ரஜினி பேசினார் என்று பெரியாரிய வாதிகள் சுட்டிக்காட்டினர்.
அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவரும் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான கலி. பூங்குன்றனிடம் ரஜினி கூற்று பற்றி கேட்டது பிபிசி தமிழ் "இந்த ஊர்வலத்தில் பெரியாரும் ஒரு ட்ரெக்கில் வந்துகொண்டிருந்தார். அவருக்குக் கறுப்புக் கொடிகாட்ட ஜனசங்கத்தினர் அனுமதி பெற்றிருந்தனர். கறுப்புக் கொடி காட்டும்போது, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினார். ஆனால், பெரியாரின் வாகனம் கடந்து சென்றுவிட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத் தொண்டர்கள், அதே செருப்பை எடுத்து ஊர்வலத்தில் வந்த ட்ரெக்கில் இருந்த ராமர் படத்தை அடித்தனர். இதுதான் நடந்தது," என்றார் அவர்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்களும் இதே கருத்தை பிரதிபலித்தனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி சொன்னது என்ன?
இதனைத் தொடர்ந்து பெரியார் குறித்து தவறான கருத்துகளை பேசியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,`` 1971-இல் நடந்த நிகழ்வு பற்றி நான் பேசியது போல எதுவும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது இந்து குழுமத்தின் அவுட்லுக் இதழில் 2017ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. அதில் அந்த ஊர்வலத்தில் ராமர், சீதை உருவபொம்மைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி செருப்பு மாலை அடித்ததாக கூறப்பட்டுள்ளது. இல்லாததை ஒன்றும் நான் கூறவில்லை. கற்பனையாக ஒன்றும் கூறவில்லை. மற்றவர்கள் பேசியதையும், பத்திரிக்கைகளில் வந்ததையும்தான் நான் பேசியிருக்கிறேன்." என தெரிவித்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பெரியார் திராவிட கழக தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன்,`` "ஓர் ஆங்கிலப் பத்திரிகையை ஆதாரமாக காட்டி அதில் வந்த செய்தியைத் தான் கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் அந்த பத்திரிகையில் ராமர் மற்றும் சீதை நிர்வாணமாக இருக்கும் படமே இல்லை. ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருக்கும் படமும் இல்லை.`` என கூறினார்.
உண்மையில் அவுட்லுக் பத்திரிகை இந்து குழுமத்துக்கு சொந்தமானதல்ல என்பதால் அது குறித்த கிண்டல்களும் சமூக வலைதளத்தில் பரவலாகப் பகிரப்படுகின்றன.
பிற செய்திகள்:
- அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? - முதன்முறையாக விளக்கமளித்த இளவரசர் ஹாரி
- சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகள்: அதிகாரிகளை திசை திருப்ப மணல் மூட்டைகள்
- தாவூத்துக்கு முன்பே மும்பையை அச்சுறுத்திய கரீம் லாலா பற்றி தெரியுமா?
- அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் பதவிக்கான போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: