'பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது நடைபெறாத ஒன்று' - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

'பெரியார்ரஜினிகாந்த் பற்றி பேசியது நடைபெறாத ஒன்று' - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

பட மூலாதாரம், SUJIT JAISWAL / getty images

தந்தை பெரியார் மதிக்கப்பட வேண்டியவர். அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதை ஏற்க முடியாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

நடைபெறாத ஒரு விஷயத்தை சொல்லி, இதுபோல மக்களை திசை திருப்பும் வேலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏன் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

News image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "1971ல் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடைபெறாத ஒரு விஷயத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்? பல ஊடகங்களில் அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் சொல்வதைப் போல ஒரு சம்பவமே நடக்கவில்லையென இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தலையங்கமே எழுதியிருக்கிறார்கள்."

"துக்ளக்கில் இதைப் பற்றி எழுதிய சோவே, நீதிமன்றத்தில் சொல்லும்போது எனக்கு சில அமைப்புகள் கொடுத்த தகவலின்பேரில்தான் நான் எழுதினேன். வேறு எதும் தெரியாது எனச் சொல்லிவிட்டார். நடைபெறாத ஒரு விஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி, இதுபோல,மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபட வேண்டும்?" என கேள்வியெழுப்பினார்.

மேலும், "எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நால்வர்தான். இவர்களது பெயர்களுக்கு சிறு இழுக்கு ஏற்பட்டாலும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. இதுபோல சர்ச்சைக்குரிய கருத்தையெல்லாம் பேச வேண்டாம்; வாயை மூடி மௌனமாக இருக்க வேண்டும் என நேற்றே சொன்னோம்," என்று கூறிய ஜெயக்குமாரிடம், இது தொடர்பாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், "இப்போது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் விஷயம் தொடர்பாக நான் ஏதும் சொல்ல முடியாது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி செயல்படுவோம். மக்கள்தான் இறுதி எஜமானர்கள். நடைபெறாத ஒரு விஷயத்தைப் பற்றி ரஜினிகாந்த் என்ன ஆதாயத்திற்காகச் சொன்னார் என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு ஆதாரம் கேட்டால், அவுட் லுக் பத்திரிகையைக் காட்டுகிறார். துக்ளக்கூட அதைப் பற்றி எழுதவில்லை. இப்படி ஒரு தவறான கருத்தைச் சொல்லி, மக்களைத் திசை திருப்பக்கூடாது என்றுதான் கண்டம் தெரிவித்திருக்கிறோம்," என்றார்.

தந்தை பெரியார்

இந்த விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவாக அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் அவர்களது கருத்தைச் சொல்கிறார்கள். நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்கிறோம் என்ற ஜெயக்குமாரிடம், இந்த விவகாரம் தொடர்பாக திராவிடக் கட்சிகள் பயப்படுகிறதா என்று கேள்வியெழுப்பப்பட்டது.

"அதற்கு தி.மு.கதான் பயப்பட வேண்டும்; எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. ஏனென்றால் எங்கள் வரலாறு அப்படி இருக்கிறது. எத்தனை ரஜினி வந்தாலும் அண்ணா தி.மு.கவை அசைக்க முடியாது" என்றார் ஜெயக்குமார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, "தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: