வில்சன் கொலை வழக்கு: 'தமிழக காவல்துறை மீது வைக்கப்பட்ட குறி'

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கன்னியாகுமரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிறப்புநிலை காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இருவர், பல காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியகுமாரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டதற்கு தற்போதுவரை எந்த காரணமும் தெரியவில்லை.
ஆனால் வில்சன் கொலையில் கைதாகியுள்ள அப்துல் சமீம் மற்றும் தௌபீக், தமிழக காவல் துறையினரை பழிதீர்ப்பதற்காக தொடர் கொலை சம்பவங்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். அவர்களின் முதல் கொலையில் பலியானவர் வில்சன் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
வில்சன் கொலை தொடர்பாகவும், இருநபர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் விசாரணை செய்ய, அப்துல் சமீம் மற்றும் தௌபீக் ஆகிய இருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் பத்து நாள் காவலில் எடுத்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act) கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.
வில்சன் கொலை செய்யப்பட்டது எப்படி?
ஜனவரி 8ம் தேதியன்று இரவு எட்டு மணி அளவில், களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார் வில்சன். அங்கு வந்த இருவர், வில்சனை துப்பாக்கியால் சுட்டு அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் அந்த இருநபர்களின் அடையாளமும் தெளிவாக தெரிந்ததால், உடனடியாக இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர். தமிழகத்தில் பத்து தனிப்படைகள் அமைத்ததோடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில காவல்துறையினரிடம் சமீம் மற்றும் தெளபீக்கின் புகைப்படங்களை அனுப்பி தேடுதல் நடத்தினர்.

மேலும் தலைமறைவான இருவரை பற்றிய தகவலை தருபவர்களுக்கு ரூ. 7 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீம் மற்றும் தௌபீக், ஜனவரி 16ம் தேதி, கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். இருவரும் களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்து எங்கு சென்றனர் என்பதை அறிய அவர்கள் சென்ற தடத்தில் இருந்த பல சிசிடிவி காட்சிகளை வைத்து, கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக காவல்துறையினர், தமிழக காவல்துறையினரிடம் இருவரையும் ஒப்படைத்த பின்னர், குழித்துறை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய குமரி மாவட்ட காவல்துறையினர் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவகல்கள்
விசாரணை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், சமீம் மற்றும் தௌபீக் ஆகியோரின் பின்ணணி பற்றிய முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.

பட மூலாதாரம், BBC
''சமீம் மற்றும் தௌபீக்கிடம் முழுமையான விசாரணை நடைபெறவில்லை. இப்போதுதான் காவலில் எடுத்துள்ளோம். இருவரும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் இலக்கு வில்சன் கிடையாது. தமிழக காவல்துறையைச் சேர்ந்த பலரை கொலை செய்யவேண்டும் என திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார்கள். அவர்களின் கூட்டாளிகள் மூவரை ஜனவரி மாதத் தொடக்கத்தில், தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) தமிழக காவல்துறையினர் ஒப்படைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை தமிழக காவல்துறையினர் கைப்பற்றினர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பலரைக் கொலை செய்யவேண்டும் என முடிவு செய்திருந்ததாக சொல்கிறார்கள்,''என்கிறார் ஸ்ரீநாத்.
''சமீம் மற்றும் தௌபீக் கொலை செய்ய இலக்கு வைத்திருந்த நபர்களின் பட்டியலை வைத்திருந்தார்களா என உறுதியாக தெரியவில்லை. ஜனவரி 7ம் தேதி அவர்களின் கூட்டாளிகள் மூவர் கைதானார்கள். இதனால், ஜனவரி 8ம் தேதி அன்று சோதனை சாவடியில் இருந்த வில்சனை, சுட்டுக்கொன்றதாக சொல்கிறார்கள். முதல் சம்பவத்தில் மாட்டிக்கொண்டதால், அடுத்தடுத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டதாக சொல்கிறார்கள்,''என்கிறார் ஸ்ரீநாத்.
சமீம் மற்றும் தௌபீக் தனிப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களா என கேட்டபோது, ''இருவருக்கும் நணபர்கள் இருந்தார்கள். அவர்களும் கைதாகி விசரணையில் இருப்பதால், உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. நண்பர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றபட்டுள்ளதால், யாரிடம் இதனை வாங்கினார்கள், எந்த அமைப்புகளோடு தொடர்பில் இருந்தார்கள் என விரைவில் கண்டறிவோம்,'' என்றார்.
கைதான தௌபீக்கின் தாயார் குற்றச்சாட்டு
இதற்கிடையில் கைதுசெய்யப்பட்டுள்ள தௌபீக்கின் தாயார் ஜன்னத், தனது மகனை காவல்துறையினர் வேண்டுமென்றே கைது செய்துள்ளதாகவும், காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது என்கவுன்டர் செய்துவிடுவார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

டிசம்பர் 18ம் தேதி முதல் தனது மகன் காணவில்லை என கோட்டாறு காவலநிலையத்தில் புகார் செய்தநிலையில், எந்த முன்னேற்றமும் இல்லாததால், நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
''எங்களுக்கு ஆதரவு யாருமில்லை. நானும் என் மகன் தௌபீக் மட்டும்தான் இருக்கிறோம். என் மகனை காவல் துறைதான் கடத்தி வைத்திருந்தார்கள். ஜனவரி 9ம் தேதி கோர்ட்டில் வழக்கு தொடர்கிறேன். என் மகனின் புகைப்படத்தை அடுத்தநாள் வெளியிட்டு, கொலையில் தொடர்பு இருப்பதாக அறிவிக்கிறார்கள். என் மகன் குற்றவாளி இல்லை,''என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் ஜன்னத்.
ஆனால் ஜன்னத்தின் புகாரில் உண்மையில்லை எனக்கூறும் ஸ்ரீநாத், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்துத்தான் சமீம் மற்றும் தௌபீக்கை பிடித்ததாக கூறுகிறார்.
வில்சனின் குடும்பத்தினர் சொல்வது என்ன?
ஆய்வாளர் வில்சனுக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் திருமணமானவர். இரண்டாவது மகள் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருப்பதால், வில்சன் அவரை மிகுந்த அக்கறையுடன் வளர்த்துள்ளார்.
வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் குடும்பத்தினர் துக்கத்தில் இருந்து மீளவில்லை என்பதால் பேச முன்வரவில்லை. பிபிசி தமிழிடம் பேசிய நெருங்கிய உறவினர் ஒருவர் பெயர் வெளியிட விரும்பவில்லை. ''ஊடகங்களில் எங்கள் வீட்டார் வருத்தமாக இருப்பதைப் பற்றி மோசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள். எங்கள் பெயர்களை குறிப்பிடவேண்டாம்,''என வேண்டுகோள் விடுத்தார்.

வில்சனின் இழப்பு குறித்து கேட்டபோது, ''அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பு. இரண்டவது மகள் மாற்றுத்திறனாளி என்பதால், தினசரி அவருக்கு உணவு கொடுப்பது முதல் எல்லா வேலைகளையும் பாசத்தோடு செய்தார். அவரை என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என தெரியவில்லை. தனது கடமையில் கண்ணியமாக நடந்துகொண்டவர். எப்போதும் தாமதமாக வேலைக்கு சென்றதில்லை. அவர் இறந்த அன்று, இரவு 8 மணிக்கு வேலை என்பதால், 7:30மணிக்கு சோதனை சாவடிக்கு சென்றுவிட்டார். அவர் இறந்த தகவலை எங்களால் நம்பமுடியவில்லை,''என்று தெரிவித்தார்.
மேலும் காவல் துறையினர் அதிக கவனத்துடன் கொலை வழக்கை விசாரித்துவருவது ஆறுதல் தருவதாக கூறினார். ''எங்களிடம் வில்சன் குறித்து கேட்டதோடு, விசாரணை மூலம் நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியாக சொல்கிறார்கள். காவல் துறையினர் அவர்களது குடும்பத்தில் ஒருவரை இழந்ததாகத்தான் நினைக்கிறார்கள். இது மட்டும்தான் எங்களுக்கு கிடைத்த ஆறுதல்,'' என்றார். வழக்கு விரைவில் முடிந்து, வில்சன் கொலைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறுகிறார் அவர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரையுள்ள அதிகாரிகள் பலரும் தாங்களாக முன்வந்து அளித்த உதவித்தொகை ரூ. 7 லட்சத்தை தொட்டது. தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













