பெற்றோர் தினம்: ''உடல்தானத்தால் 7 பேர் உடலில் எங்கள் மகன் உயிருடன் இருக்கிறான்’’ - நெகிழ்ச்சி கதை

எங்க புள்ள எங்க கூட இல்லாட்டாலும்: ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான் : விவசாய தந்தை
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்த சரத்குமார் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஏழு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்த சரத்குமார் ஏழு பேரின் உடலில் உயிருடன் இருப்பதாகக் கூறி அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்யவில்லை.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தமிழகத்தில்அதிகரித்து வருகிறது.

இதே போல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது பரமக்குடி இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று ஏழு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார். வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகனான இவர், சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

எங்க புள்ள எங்க கூட இல்லாட்டாலும்: ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான்
படக்குறிப்பு, சரத்குமாரின் பெற்றோர் மற்றும் சகோதரிகள்.

இளைஞர் சரத்குமார் கடந்த ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இளையான்குடி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் சரத்குமாருக்கு பலத்த காயம் அடைந்த 2 மணிநேரமாக சாலையில் கிடந்துள்ளார். பின்னர் அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றில் சரத்குமாரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சரத்குமாரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து சரத்குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் இளைஞர் சரத்குமாரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறியதையடுத்து உடனடியாக சரத்குமாரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

எங்க புள்ள எங்க கூட இல்லாட்டாலும்: ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான் : விவசாய தந்தை

எனினும் கடந்த ஜனவரி 15ந்தேதி சிகிச்சை பலனளிக்காமல், சரத்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சரத்குமாரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து மேலும் பலரது உயிரைக் காப்பாற்றும் என மருத்துவர்கள் சரத்குமாரின் பெற்றோரிடம் கேட்டு கொண்டனர். இதற்கு சரத்குமாரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனார்.

இதனை தொடர்ந்து மதுரை மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி டீன்கள் மூலம் சரத்குமாரின் உடலுறுப்புகள் எடுக்கப்பட்டன. இதில் இதயம் விமானம் மூலம் சென்னைக்கும், சரத்குமாரின் கண்கள் திருச்சிக்கும், அவரது சிறுநீரகங்கள் மதுரை மற்றும் தஞ்சாவூருக்கும் அனுப்பப்பட்டது. சரத்குமாரின் கல்லீரல் கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் 30 நிமிடங்களில், மதுரையில் இருந்து கோவைக்கு சரத்குமாரின் கல்லீரல் எடுத்து செல்லப்பட்டது. இதன்மூலம் மறைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் ஏழு நோயாளிகள் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

சரத்குமாரின் பெற்றோர் படிக்காதவர்கள். விவசாயத் தொழில் செய்பவர்கள். சரியான நேரத்தில் சரியாக முடிவெடுத்துள்ளனர்.

எங்க புள்ள எங்க கூட இல்லாட்டாலும்: ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான் : விவசாய தந்தை

மேலும், பரமக்குடி நகர் முழுவதும் சரத்குமார் மரணம் குறித்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், ''அனைவரும் கட்டாயமாகத் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டவும். இது சரத்குமாரின் வேண்டுகோள்...'' என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றியிருக்கிறது.

தனது சொந்த கிராமமான காந்தி நகரில் இளைஞர்களுடன் 'டிக் டாக்' செய்து கொண்டு துடிப்புடன் சுற்றி திரிந்த சரத்குமார் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், சரத்குமாரின் உடலுறுப்பு தானத்தால் மக்களின் பார்வை தமது கிராமத்தின் மீது திரும்பியுள்ளதை நினைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து சரத்குமார் தந்தை வெற்றிவேல் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''மதுரை தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவன் கண் விழிக்க வாய்ப்பில்லை என்று கூறினர். பின்னர் மூளைச்சாவு அடைந்தாரா என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் என் மகன் சரத்குமார் மூளைச்சாவு அடைந்தார் என்று உறுதி செய்யப்பட்டது,'' என்றார்.

''எனது மகனின் உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்கினால் பல குடும்பங்கள் வாழ்வு பெறும் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து மனதை தேற்றிக்கொண்டு சரத்குமாரின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க சம்மதித்ததோம்.''

எங்க புள்ள எங்க கூட இல்லாட்டாலும்: ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான் : விவசாய தந்தை

''என் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு என் மகன் சரத். அவன் எங்களை விட்டு பிரிந்தாலும் உடலுறுப்பு தானத்தால் ஏழு பேரின் உருவத்தில் வாழ்ந்து வருகிறான். எனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால் இப்போது எனக்கு 10 குழந்தைகள் உள்ளனர்,'' சரத்குமார் அப்பா வெற்றி வேல் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'

இது குறித்து சரத்குமார் நண்பர் பாக்கியராஜ் பிபிசி தமிழியிடம் பேசுகையில், ''முதலில் சரத்குமார் பெற்றோருக்கு உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் மிகவும் பயந்து போய் உடலுறுப்பு தானம் செய்ய அனுமதி தர வில்லை. பின் நண்பர்கள் நாங்கள் அனைவரும் அவர்களுக்கு எடுத்து சொன்னதையடுத்து உடலுறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர்,'' என்றார்.

''சரத்குமாரின் உயிர் பிரிந்தாலும் அவரின் உறுப்புகள் ஏழு பேர் உயிருடன் கலந்து இருப்பதால் அவரின் பெற்றோர் இறுதி சடங்குகள் செய்ய வில்லை. எங்கள் நண்பன் உயிர் எங்களை விட்டு பிரிந்தாலும் அவன் ஏழு பேர் உருவத்தில் வாழ்ந்து வருகிறான் அவனை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்,'' என்றார் சரத்குமார் நண்பர் பாக்கியராஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: