You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - விரிவான தகவல்கள்
கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்தும் இன்று நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி, இந்திய ஐக்கிய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுமார் 140 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மத ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அரசமைப்பின் சட்டப்பிரிவு 14ன் கீழ் தவறு என்றும் இந்தியாவின் மதசார்பற்ற அடையாளத்தை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது என்பதுதான் இந்த வழக்குகளின் சாராம்சம்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று என்ன நடந்தது?
இந்த வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குடியுரிமை திருத்த சட்டம் அமலாகும் நடவடிக்கைகளை தள்ளிப்போட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இது தொடர்பாக நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் தொடரப்பட்ட வழக்குகளை தனியாக விசாரிக்கப் போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத ரீதியான பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்தியாவின் பிற பகுதியினர் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் சூழலில், இந்து, முஸ்லிம் என எந்த மதத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக் குடியேறிகள் குடியேறினாலும் அது தங்கள் வாழ்வாதாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் என்று வடகிழக்கு மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன.
என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
அதே போல, அஸ்ஸாமில் இந்த சட்டத்தை அமல்படுத்த தற்காலிக தடை வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கேட்டுக் கொண்டார். இது அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
என்.பி.ஆர் நடைமுறையின்போது, ஒருவர் இந்தியக்குடிமகனா என்ற சந்தேகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால் அது மிகுந்த சிக்கலை உருவாக்கும். இதனால் முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சிஏஏ-வை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விஷ்வநாதன் வாதாடினார்.
அரசு தரப்புஎன்ன கூறியது?
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், அஸ்ஸாம் தொடர்பான மனுக்களை தனியே விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்திய பதிவேட்டில் குடிமக்களின் இறுதிப் பட்டியல் வெளிவரும் வரை அஸ்ஸாமில் என்.ஆர்.சி நடைமுறைக்கு வராது என்றார்.
உத்தர ப்பிரதேசத்தில் சிஏஏ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் சிங்வி நீதிபதிகளிடம் தெரிவித்தார். எந்த விதிகளும் வகுக்கப்படாமலேயே இந்த நடைமுறை தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. ஆனால் 40 லட்சம் பேர் சந்தேகத்திற்குரிய குடிமக்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இது உ.பி-யின் 19 மாவட்டங்களில் நடந்துள்ளது. இதனால் மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். இதற்கு தடை விதித்தால் பல சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்," என்று அவர் வாதிட்டார்.
அரசியல் சாசன அமர்வுக்கு கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க விரைவில் அரசியல் சாசன அமர்வு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு கபில் சிபலும் ஆதரித்தார். இது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் எப்போது, எப்படி நடக்கும் என்பதை இந்த நீதிபதிகள் அமர்வே இறுதி செய்யும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: