டிரம்பின் பதவி நீக்க விசாரணை தொடங்கியது - விதிகள் குறித்து காரசார விவாதம் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் இதற்கான விதிகள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கனல் நினைக்கிறார்.

அதிபர் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கை தொடர்பான விசாரணையில், புதிய ஆதாரத்தை கைப்பற்ற பல முறை ஜனநாயக கட்சியினர் முயற்சித்தும் அதற்கு அனுமதி அளிக்க செனட் சபை மறுத்துவிட்டது.

இந்நிலையில், இந்த விசாரணை மூடிமறைக்கப்படுவதாகவே இருக்கும் என்று ஜனநாயக கட்சியினர் கூறுகிறார்கள்.

டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம், செனட் சபையின் அனுமதியையும் பெற வேண்டும். செனட்டில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதால் அவரது பதவிக்கு ஆபத்து இல்லை.

அதிபர் மீது பதவிநீக்க விசாரணை நடப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது மூன்றாவது முறை.

2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பிடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்தார் என்பதே குற்றச்சாட்டு

முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அளித்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்றும் அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

"தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"

தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள குடமுழுக்கு, ஆகம விதிகளின் படியே நடைபெறுமென அந்தக் கோயிலின் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தக் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த ஜி. திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

''ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான்" - மகனுக்கு இறுதிச் சடங்கு செய்யாத பெற்றோர்

ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்த சரத்குமார் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஏழு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்த சரத்குமார் ஏழு பேரின் உடலில் உயிருடன் இருப்பதாகக் கூறி அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்யவில்லை.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தமிழகத்தில்அதிகரித்து வருகிறது.

இதே போல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது பரமக்குடி இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று ஏழு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ரஜினி- பெரியார் சர்ச்சை: ``அவுட்லுக்கில் நான் எதை ஆதாரமாக வைத்து எழுதினேன்?``

செவ்வாய்கிழமையன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் 1971 ஊர்வலம் குறித்து தான் பேசியது பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் என்றும் கற்பனையாக ஏதும் பேசவில்லை என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக மன்னிப்பு ஏதும் கேட்க முடியாது என்ற அவர், தனது பேச்சுக்கு அவுட்லுக் கட்டுரை ஒன்றையும் ஆதாரமாக காட்டினார்.

2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக தமிழக அரசை விமர்சித்து பத்திரிக்கையாளர் பாலா வரைந்த கார்ட்டூனுக்காக அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக வரலாற்றில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அவுட்லுக் பத்திரிக்கையில் `The Tamil Gag Raj' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை பத்திரிக்கையாளர் ஜி.சி.சேகர் எழுதியிருந்தார்.

அந்த கட்டுரையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த புகைப்படங்களை பிரசுரித்த துக்ளக் பத்திரிக்கை மீதும், அதன் ஆசிரியர் சோ ராமசாமி மீதும் தமிழக அரசு அடக்குமுறைகளை கையாண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது சொமேட்டோ

இந்தியாவின் முக்கிய உணவு விநியோக நிறுவனமான ஊபர் ஈட்ஸை சக போட்டி நிறுவனமான சொமேட்டோ வாங்கியுள்ளது.

இதனால் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு, இனி சொமெட்டோ சேவை அளிக்கும். ஆனால் இந்த முடிவு காரணமாக ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

இந்த ஒப்பந்தம், வேகமாக வளர்ந்து வரும் ஸ்விகி நிறுவனத்துடன் வீரியத்துடன் போட்டியிட சொமேட்டோ நிறுவனத்துக்கு வாய்ப்பாக அமையும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: