"தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"

தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள குடமுழுக்கு, ஆகம விதிகளின் படியே நடைபெறுமென அந்தக் கோயிலின் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தக் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த ஜி. திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கடைசியாக பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா எப்போது, எந்த மொழியில் நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பு, "இதற்கு முன்பாக 1997-98ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டது" என்று கூறியது.

ஆனால், அந்த சமயத்தில் தமிழ் அர்ச்சகர்கள் இல்லை என்றும் இப்போது சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிகளை அரசே வழங்கியிருக்கிறது. ஆகவே தமிழில் குடமுழுக்கு நடத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில், பெரிய கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு குறிப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதில், 1980 மற்றும் 1997ல் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே இந்தத் திருக்குட முழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், 2002ஆம் ஆண்டு அக்டோபர் 21, 22ஆம் தேதிகளில் அனைத்து உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு அர்ச்சகர்களின் ஆகம வல்லுனர் குழுவும் இணைந்து ஒரு ஆகம கருத்தரங்கில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஆகம முறைப்படி அமைந்த கோயில்களில் ஆகம முறைப்படியே குடமுழுக்கு நடைபெற வேண்டுமென அத்தீர்மானம் கூறியது. இது தொடர்பாக ஆதீனங்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, கோயிலில் உள்ள பழக்கவழக்கத்தின் அடிப்படையிலும் ஆகம வல்லுனர்களின் கருத்துருவின் அடிப்படையிலும் குடமுழுக்கு விழா நடைபெறும் என தேவஸ்தானத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென மனுதாரர் கூறியிருந்த நிலையில், தேவஸ்தானம் சமர்ப்பித்த குறிப்பில் அது தொடர்பாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் தஞ்சைக் கோயிலின் தேவஸ்தானம் இணைக்கப்படவில்லை என்பதால், அவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: