அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ராவணன், கொம்பன் மற்றும் ஏ.சி கேரவனில் வந்த காளை - சுவாரஸ்ய தகவல்கள்

- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
"அன்னைக்கு காலைல 6 மணி. கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சா" - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்த இந்தக் கட்டுரையை இப்படிதான் தொடங்க வேண்டும்.
ஆம், வாடிவாசலில் இருந்து காளைகள் திறந்துவிடப்பட்டது என்னவோ 8 மணிக்குதான். ஆனால், இந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய, புகைப்படம் எடுக்க நாங்கள் சென்றது அதிகாலை 3 மணிக்கு. அப்போது சென்றால்தான் இடம் கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த அதிகாலையில் யார் இருக்க போகிறார்கள்? மிகைப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகத்துடன்தான் சென்றோம். ஆனால், 2 மணிக்கே சில செய்தியாளர்கள் வந்து வாட்டமான இடத்தை பிடித்துவிட்டார்கள்.
மிச்சமிருந்த இடத்தில் கேமரா ஸ்டாண்ட், லென்ஸ் ஸ்டாண்ட் எல்லாம் செட் செய்துவிட்டு அமர்ந்தோம்.
ஏதோ பாகுபலி பதவியேற்பு விழாவுக்கு வந்த மகிழ்மதி மக்களை போல எங்களுக்கு முன்பே பெரும் திரளான மக்கள் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டிருந்த கேலரியில் அமர்ந்திருந்தனர்.
காளைக்கு அஞ்சி ஓடும் வீரர் வேகத்தில் மணி ஓடியது.
ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டுக்கான உறுதியேற்பை வீரர்கள் 7.30 மணிக்கு எடுத்தனர்.
ஏ.சி கேரவன்ல வந்த காளை

அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து நடந்த இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
கோயில் காளை மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை கௌரவிக்கும் விதமாக விடப்படும் காளை என சம்பிரதாயங்கள் முடிந்து காலை 8 மணி அளவில் போட்டி தொடங்கியது.
அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் வதம் செய்த 'ராவணன்' காளை, அலங்காநல்லூரிலும் திமிறிய திமிலுடன் மாடுபிடி வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது. இந்த காளை காவல்துறை அதிகாரி அனுராதாவுக்கு சொந்தமான காளை.
அதன் பின், 'ஏசி கேரவன்ல வந்த காளப்பா இது…' என்று அதீத எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை வாடிவாசலைவிட்டே வெளியே வர மறுத்துவிட்டது.
அதன் பின் களம் இறங்கிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளைகளான சின்ன கொம்பன், கருப்பு கொம்பன் மற்றும் வெள்ளை கொம்பன் ஆகிய காளைகள் நின்று விளையாடியன.
30க்கும் மேற்பட்டோர் காயம், இருவர் பலி
அவனியாபுரம், பாலமேடு போல அல்லாமல், முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டுக்காக காளையை அழைத்துவந்தபோது, மற்றொரு காளை முட்டியதில் சோழவந்தானை சேர்ந்த ஶ்ரீதர் என்பவர் உயிரிழந்தார்.
செக்கனூரனியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் மாரடைப்பில் உயிரிழந்தார்.
'இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கலாம்'
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண ஏராளமான வெளிநாட்டினர் வந்திருந்தனர்.
இஸ்ரேலிலிருந்து வந்திருந்த ரீவ், "ஜல்லிக்கட்டு என் கலாசாரம் இல்லை. ஆனால், எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏகப்பட்ட கூட்ட நெரிசல் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இதனை ஏற்பாடு செய்திருக்கலாம். இருந்தபோதிலும் இது எனக்கு நல்ல அனுபவம்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'அந்த 10 பேருக்கு நன்றி'
அலங்காநல்லூர் ஜல்லிகட்டை சுவாரஸ்யமாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர்.

பார்வையாளர்கள் மாடத்திலிருந்தவர்கள், "கூட்ட நெரிசலின் காரணமாக எங்களால் ஜல்லிக்கட்டை சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்து கொண்டவர்கள் இதனை தொகுத்து வழங்கியவர்கள்தான். அந்த 10 பேருக்கு நன்றி," என்றனர்.
முதல் பரிசாக 'கார்'
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் அதிக காளைகளை தழுவிய சிறந்த மாடுபிடி வீரருக்கும், களத்தில் சிறப்பாக நின்று விளையாடிய காளைக்கும் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இந்த பரிசு வழங்கப்பட்டது..
மாறநாடு குளமங்கலம் காளை முதல் பரிசை வென்றது. பார்வையாளர்களை ஈர்த்த ராவணா காளை இரண்டாம் பரிசை பெற்றது. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதல் பரிசு பெற்றார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












