You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்திய ரூபாயில் லட்சுமி படம்': காந்தி படம் எப்போது வந்தது?
இந்து மதக் கடவுளான லட்சுமியின் படத்தை ரூபாய் தாள்களில் அச்சிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு மேம்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "இந்தக் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோதிதான் பதிலளிக்க வேண்டும். இந்தோனீசிய பணத் தாள்களில் கடவுள் கணேசனின் படம் அச்சிடப்படுகிறது. என்னைக் கேட்டால் லட்சுமியின் படத்தை ரூபாய் தாள்களில் அச்சிடுவது பலனளிக்கும் என்பேன். யாரும் அதை ஆட்சேபிக்க மாட்டார்கள்," என்றார்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ள நிலையில், இந்திய ரூபாய் தாள்கள் சுதந்திரத்துக்கு பிறகு எவ்வாறு மாறியுள்ளன, காந்தியின் படம் எப்போது இடம் பெறத் தொடங்கியது? என்ற கேள்விகளுக்கான பதில்களை காண்போம்.
ஆகஸ்டு 15, 1947 அன்றே இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்த பின்னரும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு காலத்தில் அச்சிடப்பட்ட, மன்னர் ஆறாம் ஜார்ஜின் படம் அச்சிடப்பட்ட ரூபாய் தாள்களையே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வந்தது.
1949இல் புதிய ரூபாய் தாள்கள் வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியது. புதிய ரூபாய் தாளில் மன்னர் படத்துக்கு பதிலாக காந்தியின் படத்தை வைக்கலாம் என்று அப்போதே பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதற்கு பதிலாக சாரநாத்தில் உள்ள நான்முகச் சிங்கத்தின் படத்தை அச்சிட இறுதியில் முடிவு செய்யப்பட்டதாகவும், ரிசர்வ் வங்கியின் இணையதளம் தெரிவிக்கிறது.
1950இல் ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 ஆகிய மதிப்புகளில் புதிய ரூபாய் தாள்களை வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி. அப்போது பத்து ரூபாய் தாள்களைத் தவிர பிற மதிப்புகளைக் கொண்ட ரூபாய் தாள்களுக்கான வடிவமைப்பு மாற்றப்பட்டது.
இந்தி எப்போது பிரதானமானது?
1953 முதல் இந்தி மொழியில் எழுதப்பட்ட மதிப்பு, ரூபாய் தாள்களில் பிரதானமான இடத்தைப் பெற்றது.
அடுத்த ஆண்டே ரூ. 1,000, ரூ. 5,000 மற்றும் ரூ. 10,000 ஆகிய உயர் மதிப்புகளில் ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. வரி ஏய்ப்புக்கு உதவும் வகையில் பணப் பதுக்கல்களுக்கு இந்த உயர் மதிப்புத் தாள்கள் பயன்படுத்தப்படுவதாக கூறி, அந்த ரூபாய் தாள்களுக்கான பணமதிப்பு நீக்கத்தை 1976இல் இந்திய அரசு அறிவித்தது.
1975இல் வெளியான 100 ரூபாய் தாள்களில், இந்தியா உணவுத் தேவையில் தன்னிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் வேளாண் நடவடிக்கைகளை சித்தரிக்கும் படங்கள் அச்சிடப்பட்டன.
இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் தாள்களில் புலி, மான்கள் உள்ளிட்டவற்றின் படங்கள் இடம்பெற்றன.
1967இல் பொருளாதாரச் சிக்கன நோக்கங்களுக்காக ரூபாய் தாள்களின் அளவு சற்று சிறிதாக்கப்பட்டது.
ரூபாய் தாள்களில் காந்தியின் படம்
1969இல் காந்தியின் நூற்றாண்டு விழா வந்தபோதுதான், அவரது படம் முதல் முறையாக ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டது.
ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.100 ஆகிய தாள்களில் தனது 'சேவாகிராம்' ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றது.
ரூ. 20 மற்றும் ரூ. 50 தாள்கள் அறிமுகம்
சிக்கன நடவடிக்கைக்காக 1972 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ. 20 மற்றும் ரூ. 50 தாள்கள் வெளியிடப்பட்டன.
1980களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னிலைப் படுத்தும் வகையிலான படங்கள் ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டன.
ஒரு ரூபாய் தாளில் எண்ணெய் தோண்டும் இயந்திரம், இரண்டு ரூபாய் தாளில் ஆர்யபட்டா செயற்கைக்கோள், ஐந்து ரூபாய் தாளில் டிராக்டர் மற்றும் நூறு ரூபாய் தாளில் ஹிராகுட் அணையின் படம் ஆகியன இடம்பெற்றன.
1987 அக்டோபரில் வெளியான 500 ரூபாய் தாளில் காந்தியின் முகப்படமும், அவர் தண்டி யாத்திரை சென்ற படமும் இடம்பெற்றன என்றாலும், 1996இல் இருந்துதான் பிற ரூபாய் தாள்களிலும் காந்தியின் படம் அச்சிடப்பட்டது.
1,000 ரூபாய் தாள்
2000வது ஆண்டு அக்டோபர் 9 அன்று 1000 ரூபாய் தாளும் அறிமுகமானது. அதே ஆண்டு நவம்பர் 18 அன்று கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் தாள் அறிமுகமானது.
2005 முதல் ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்ட ஆண்டும் அந்தத் தாளிலேயே குறிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்ததுடன், காந்தி படம் அச்சிடப்பட்ட தாள்களின் இடையில், நூல் பட்டை பாதுகாப்புக்காக சேர்க்கப்பட்டது.
இந்திய ரூபாய் சின்னம் (₹)
2011இல் இந்திய ரூபாய் சின்னம் (₹) அறிமுகப்படுத்தப்பட்டு, அது ரூபாய் தாள்களிலும் இடம் பெற்றது. தங்கள் நாட்டு நாணயத்துக்கு தனி சின்னம் உள்ள உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்தது.
2005க்கு பிறகு 2015இல் மீண்டும் பெரிய அளவில் பாதுகாப்பு அம்சங்கள் ரூபாய் தாள்களில் சேர்க்கப்பட்டன. அதே ஆண்டு ஒரு ரூபாய் தாள்களை மீண்டும் அறிமுகம் செய்தது இந்திய அரசு.
பிரதமர் நரேந்திர மோதியால் நவம்பர் 2016இல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபின், ரூபாய் தாள்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி, அதன் பின் அச்சிடப்பட்டவையே இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன.
2016க்கு முன் அச்சான 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் வங்கிகளால் திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டாலும், பிற மதிப்பிலான தாள்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்