இந்தியாவில் உயரும் சில்லறை பணவீக்கம் - உங்களை எப்படி பாதிக்கும்?

இந்தியாவில் உயரும் சில்லறை பணவீக்கம்

பட மூலாதாரம், ARUN SANKAR

    • எழுதியவர், நிதி ராய்
    • பதவி, வணிக செய்தியாளர், மும்பை

பெரும்பாலான இந்தியர்களின் மனதில் வெங்காயம், தக்காளி விலை பற்றிய யோசனைதான் ஓடிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

கடந்த டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. இது ஜூலை 2014ஆம் ஆண்டில் உயர்ந்ததைவிட அதிகமானது.

இதுவே கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக இருந்தது.

இந்த உயர்வுக்கான முக்கிய காரணம், காய்கறி விலையில் ஏற்பட்ட 60 சதவீத விலை உயர்வு. கடந்த ஆண்டு நாட்டின் சில பகுதிகளில் வெங்காய விலை 300 சதவீதம் உயர்ந்தது. மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, விலை உயர்வு ஏற்பட்டது.

உருளைக் கிழங்கின் விலையும் 45 சதவீதம் உயர்ந்தது. அதேபோல பருப்பு வகைகள் மற்றும் தானியங்களும் குறிப்பிடத் தகுந்த விலை ஏற்றத்தை கண்டிருந்தன.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த, அடுத்த மாதம் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக்கூட்டத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். விலையை கட்டுக்குள் வைக்க சில்லறை பணவீக்க இலக்கை 2-6 சதவீதமாக தேசிய வங்கி வைத்துள்ளது. 2016ல் பணவியல் கொள்கை கமிட்டி உருவாக்கப்பட்டதில் இருந்து இந்த இலக்கை தாண்டியதில்லை.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை என்றால், கடன்களை மிக அதிக வட்டிக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நுகர்வோரிடம் குறைந்த பணம் இருக்கும்.

இந்நிலையில் காய்கறிகளின் விலை மார்ச் மாதத்தில் குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார மந்தநிலையும் பணவீக்கத்தோடு இணைந்து மிகவும் மோசமான சூழலை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்போது, இது தேவையில்லாத சிக்கல் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதே சமயத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 4 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்து கொண்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :