ராமகிருஷ்ண மடத்தில் சிஏஏ பற்றி மோதி பேசியதால் சர்ச்சை

பட மூலாதாரம், Twitter
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ராமகிருஷ்ண மடத்தில் சிஏஏ பற்றி மோதி பேசியதால் சர்ச்சை - தி இந்து
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது என்று ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"மேற்குவங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அப்போது பேசிய அவர், 'குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமையை வழங்கும் சட்டம்; பறிப்பதற்கான சட்டம் அல்ல. இந்த சட்டத்தை புரிந்துகொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ராமகிருஷ்ண மடத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளை பிரதமர் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று அந்த மடத்தின் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ராமகிருஷ்ண மடத்தின் பொதுச்செயலாளரான சுவாமி சுவீரானந்தா, 'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'" என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்: நாட்டிலேயே தமிழகம் 3வது இடம் - தினத்தந்தி

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2018ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில், கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகம்.
அதாவது, 2017-ம் ஆண்டில், 'போக்சோ' சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் செய்யப்பட்டன. 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 827ஆக உயர்ந்தது.
2018-ம் ஆண்டில், 21 ஆயிரத்து 605 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில் 21 ஆயிரத்து 401 சம்பவங்கள், சிறுமிகள் தொடர்புடையவை. 204 சம்பவங்கள் சிறுவர்கள் தொடர்புடையவை.
குழந்தைகள் வல்லுறவு சம்பவங்களில் மகாராஷ்டிரா (2,832) முதலிடத்திலும், உத்தரபிரதேசம் (2,023) 2-ம் இடத்திலும், தமிழ்நாடு (1,457) 3-ம் இடத்திலும் உள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு - தினமணி

பட மூலாதாரம், Getty Images
திருப்பத்தூா் அருகே கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 'சித்திரமேழி' கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு தலைமை வகித்த பேராசிரியர் பிரபு, "திருப்பத்தூா் மாவட்டம், கல்நாா்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம். அக்கல்லை சுத்தம் செய்து பாா்த்தபோது, அது பழைமையான 'சித்திரமேழி' கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.
'மேழி' என்பது உழவுக் கலப்பை அல்லது ஏா் என்று பொருள்படும். சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். சித்திரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவுக்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மாடுபிடி வீரர்கள் வயது வரம்பில் மாற்றம்" - இந்து தமிழ் திசை

பட மூலாதாரம், Getty Images
ஜல்லிக்கட்டில் பங்கேற்க 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை என்று முதலில் கூறிய மதுரை மாவட்ட நிர்வாகம், தற்போது மீண்டும் 18 வயதில் இருந்தே வீரர்களை அனுமதிக்கலாம் என்று வயது வரம்பை தளர்த்தி உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"மதுரை மாவட்டம் ஆவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் கடந்த ஆண்டு 18 வயதில் இருந்தே மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மாடுபிடிக்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. இதற்கு ஜல்லிக்கட்டு வீரர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர், ஆர்வலர்கள், தமிழக அரசிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாலமேட்டில் நேற்று நடந்த மாடுபிடி வீரர் களுக்கான உடல் தகுதித் தேர்வில் திடீரென்று 18 வயது ஆனவர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்ற மருத்துவத் துறையினர் அனுமதிச் சீட்டு வழங்கினர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












