நிர்மலா சீதாராமன்: நிதியமைச்சர் இல்லாமல் நடந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - நரேந்திர மோதி ஆலோசனை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020-2021ஆம் நிதியாண்டில் மிகவும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில் துறையினருடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம்கூட இல்லாத நிலையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

எனினும் பொருளாதாரம் தொடர்பான இந்தக் கூட்டத்தில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்காதது கவனிக்கப்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

கடந்த சில நாட்களாக தொழில் துறையினருடன் பிரதமர் நரேந்திர மோதி நடத்திவரும் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொழில்துறையினர் மற்றும் பொருளாதார வல்லுனர்களுடன் நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை நிர்மலா சீதாராமன் நடத்தியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி - ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரிக்கக் கோரியும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோகிணி மூசா, தங்கள் தரப்பில் எதிர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி மாதம் இறுதி வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

தினமணி - தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை வெளியுறவு அமைச்சா் ஒப்புதல்

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவா்களை விடுவிக்கவும், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது என தினமணி செய்தி கூறுகிறது.

இரண்டுநாள் பயணமாக புதுடெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன, வியாழக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினாா்.

இரு நாட்டு அமைச்சா்களும் பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்துப் பேசினா். அப்போது இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவா்கள் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: