You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா குற்றவாளியா? இறுதி தீர்ப்புக்கு முன்பே இறந்ததால் இல்லை என்கிறது உயர்நீதிமன்றம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் நினைவிடம் கட்டத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை மெரீனா கடற்கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல். ரவி என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர் என்பதால் அரசுப் பணத்தில் அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என கோரியிருந்தார்.
மக்களின் வரிப் பணத்தை, பள்ளிகள், மருத்துவமனைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராக வாதாடிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறுவது முறையற்றது எனக் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களும் கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று முடிவடைந்து, வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வழங்கிய எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததாக அறிவித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லையென்பதால் அவரைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனக் கூறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார் என்பதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே கர்நாடக உயர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டதைக் கணக்கில் கொள்ளும்போது, அவரைக் குற்றவாளி என்று கூற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்