You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமைக்கறி உடலுக்கு நல்லதா? - உண்டவரின் உண்மை கதை
- எழுதியவர், டிம் சாமுவேல்
- பதவி, பிபிசி
ஆமைக்கறி உண்மையில் உடலுக்கு நல்லதா? அது தேவையான புரதத்தை உடலுக்கு வழங்குமா? என்ன சொல்கிறார் அதனை மட்டுமே உண்டு பல நாட்கள் கடலில் வாழ்ந்தவர்.
வாருங்கள் ராபர்ட்சன்னின் கதையை கொஞ்சம் கேட்போம்.
பாய்மர கப்பல் பயணம்
டோக்லஸ் ராபர்ட்சன்னுக்கு அப்போது 18 வயது. அந்த சமயத்தில்தான் அவரது தந்தை டோகல் அந்த விசித்திரமான முடிவை எடுத்தார். டோகல் ஒரு முன்னாள் கப்பற்படை அதிகாரி, அவர்தமது பண்ணை வீட்டை விற்றுவிட்டு, ஒரு பாய்மரக் கப்பல் வாங்க முடிவு செய்தார். அந்த பாய்மர கப்பலில் உலகம் முழுவதும் தம் குடும்பத்துடன் பயணிக்கலாம் என்பது அவர் திட்டம். அந்த பயணம் தமது குடும்பத்திற்கு பெருமகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நினைத்தார்.
எல்லாம் மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது, அவர்கள் அந்த விபத்தில் சிக்கும்வரை.
1971ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த பயணம் குறித்து ராபர்ட்சன் விவரிக்கிறார், "எல்லாம் மிகச்சரியாக சென்று கொண்டிருந்தது. தினம் தினம் சாகசம்தான்." என்கிறார்.
ஆத்ம திருப்தியுடன் பயணம் சென்று கொண்டிருந்த ஒரு நாள், எங்கள் பாய்மர கப்பலை திமிங்கல கூட்டம் கலாபகொஸ் தீவு அருகே மோதியது. நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வெளியேறி ரப்பர் படகில் ஏறினோம் என்று நான்கு தசாப்தத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார்.
ஆமைக்கறியின் அறிமுகம்
கையில் மிகக்குறைவான உணவுப் பொருள் இருப்பே இருந்திருக்கிறது. உயிருடன் இருக்க வேண்டுமானால் கடல் இவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
இப்படியான சூழலில், கப்பல் விபத்து நடந்த ஆறாம் நாள், இவர்கள் உணவுக்காக ஒரு கடல் ஆமையை பிடித்திருக்கிறார்கள்.
உண்மையில் இவர்கள் நாட்களை அந்த கடல் ஆமைதான் ரட்சித்திருக்கிறது. ஆம், இவர்களின் பிரதான உணவாக அது மாறி இருக்கிறது.
ராபர்ட்சன்னின் வார்த்தைகளில் கேட்போம், "ஆமைக்கறியின் ரத்தத்தை அருந்தி ஆளுக்கு ஒரு கவளம் ஆமைக்கறி சாப்பிட்டோம். ரத்தம் கெட்டியாக இருந்ததால், அதனை உண்பதுதான் கடினமாக இருந்தது." என்கிறார்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன. மீட்பர்கள் வரவில்லை. ஆமைக்கறி அவர்களின் அன்றாட உணவாக மாறியது.
ஆமைகளின் எலும்பும், ஆமை முட்டையிலிருந்து செய்யப்பட்ட சூப்பும் இவர்களது உணவாக ஆகி இருக்கிறது.
ஆறு வாரம் அவர்களின் உணவாக இந்த ஆமைக்கறி இருந்திருக்கிறது.
முப்பதெட்டு நாட்களுக்குப்பின், ஒரு ஜப்பானிய கப்பல் அவர்களை மீட்டு இருக்கிறது.
ஆமைக்கறி நல்லதா?
ராபர்ட்சனின் குடும்பம் ஒரு இக்கட்டான சூழலில் ஆமைக்கறி உண்டு வாழ்ந்தது. அதுவொரு கையறு நிலை, அப்போது பரவாயில்லை. எப்போதும் உண்டு உயிர் வாழ முடியுமா?
ஊட்டச்சத்து நிபுணர் ஜொ ட்ராவர்ஸ், "ஆமைக்கறியில் நிறைய புரதம் உள்ளது, கொஞ்சம் கூட கார்போஹைட்ரேட் இல்லை" என்கிறார்.
மேலும், அதில் செலினியம், விட்டமின் பி12, இரும்பு சத்து, ஜின்க் என ஏராளமான நுண்சத்துகள் உள்ளன.
ஆனால், அதில் நார் சத்து, விட்டமின் ஏ மற்றும் சி, ஒமேகா 3 அதில் இல்லை. இது இறுதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்கிறார்.
அமெரிக்க அதிபரின் உணவுத் தட்டில்
அமெரிக்க அதிபரின் உணவுத் தட்டிலும் ஆமைக்கறி உணவு வகை இருந்திருக்கிறது.
அமெரிக்க அதிபராக இருந்த வில்லியம் டாஃப்ட், ஆமைக்கறி சூப் சமைப்பதற்கென்றே ஒரு சமையல்காரரை நியமித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்