நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்படும்? என்ன நடைமுறை? - “கடைசி ஆசை, உடல்நலப் பரிசோதனை”

தூக்கு தண்டனை

பட மூலாதாரம், yanyong / Getty

டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிர்பயா வழக்கின் முடிவாக இது கருதப்படுகிறது.

எனினும், இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம்.

சரி. தூக்கு தண்டனை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, என்ன நடைமுறை பின்பற்றப்படும்? ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா?

இது குறித்து மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது.

கருணை மனு

"தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனை நாளுக்குள் அரசமைப்பு சட்டப் பிரிவு 72ன் கீழ், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். குற்றவாளிகள் டெல்லி என்பதால், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய முடியும்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

பட மூலாதாரம், DELHI POLICE

படக்குறிப்பு, நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

அதற்கு பிறகு, தண்டனைக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் வேண்டும். அதாவது, குடியரசுத் தலைவர் முன்பு கருணை மனு நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்க அதில் கோரிக்கை விடுக்கப்படும். கருணை மனு நிலுவையில் இருந்தால், பெரும்பாலும் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிக்கும்" என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.

ஒரு வேலை கருணை மனு நிராகரிக்கப்பட்டால், குறிப்பிட்ட தேதியில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.

தூக்கு தண்டனை நிறைவேற்ற என்ன நடைமுறை?

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு சிறை கையேட்டில் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும். எங்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதோ, அந்த சிறையில் இதற்கான வசதிகள் செய்யப்படும்.

குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்த ஆவணங்களை சிறை அதிகாரிகள் குற்றவாளியிடம் காண்பிக்க வேண்டும்.

சரியாக ஒரு நாள் முன்பு குற்றவாளிகளின் கடைசி ஆசை குறித்து கேட்கப்படும். மேலும் அவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனும் பரிசோதனை செய்யப்படும். ஏனெனில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு, குற்றவாளிகளின் உடல் மற்றும் மனநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

அதோடு, குற்றவாளிகள் அவர்களது குடும்பங்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பிறகே, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: