You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நரேந்திர மோதியின் உரையைக் கேட்க மாணவர்கள் வர வேண்டியதில்லை': பள்ளிக் கல்வித் துறை
தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நிகழ்த்தும் உரையைக் கேட்க பொங்கல் விடுமுறைக்கு மத்தியில் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என உத்தரவிட்டதாக வந்த செய்தியை தமிழக பள்ளிக் கல்வித் துறை மறுத்துள்ளது.
மாணவர்கள் பொதுத் தேர்வை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் 'Pariksha Pe Charcha 2020' என்ற நிகழ்ச்சிக்கு புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி தல்கொதாரா மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி, அரச தொலைக்காட்சியான தூர்தர்ஷன், மனித வள அமைச்சகத்தின் யூடியூப் சேனல், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை செய்யப்படவிருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியது.
அந்தச் சுற்றறிக்கையில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ மாணவியர் இந்த நிகழ்ச்சியைத் தவறாது காணும் பொருட்டு, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் இதர சாதனங்களைப் பழுது நீக்கம் செய்தும் அன்றைய நாள் முழுவதும் மின் இணைப்பைப் பெற ஜெனரேட்டர், இன்வர்ட்டர் வசதிகளைச் செய்துகொள்ள Samagra Shiksha நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இது தொடர்பாக பின்னூட்டம் அளிக்கும்படியும் தலைமையாசிரிகளுக்கு கூறும்படியும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும், அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியரும் பிரதமரின் உரையைக் கேட்பதை உறுதிசெய்யுமாறும் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியானதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஜனவரி 13ஆம் தேதி முதல் நான்கைந்து நாட்களுக்கு பொங்கல் விடுமுறையாக இருக்கும் நிலையில், அதற்கு நடுவில் மாணவர்களை மீண்டும் எப்படி பள்ளிக்கு வரச்சொல்லலாம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். இந்த உத்தரவு ரத்து செய்யப்படவில்லையென்றால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்பாகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
"பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பா.ஜ.க. அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று "எடுபிடி"அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.
உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என அறிக்கை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பனிடம் கேட்டபோது, சுற்றறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளித்தார். "இம்மாதிரி ஒரு அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து வந்தது. மாணவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர, பள்ளிக்கூடத்திற்கு அவர்களை வரவைப்பதல்ல. வீட்டிலிருந்தபடியேகூட அவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம். மாணவர்கள் எல்லோரும் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டுமென அந்த அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை," என பிபிசியிடம் கூறினார் கண்ணப்பன்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு அன்றைய தினம் வர வேண்டியதில்லை என விளக்கமளித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: