You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணா பல்கலைக்கழகம்: இரண்டாகப் பிரிக்கப்படுவது ஏன்? - தமிழக அரசு விளக்கம்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஐந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று. 1978ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உயர் கல்வியில் சிறந்து விளங்கும் 20 கல்வி நிறுவனங்களை இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் ஆக அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்த மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தையும் அதில் சேர்க்கப் பரிந்துரைத்தது.
இதுபோல அறிவிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு வருடத்திற்கு 200 கோடி ரூபாய் வீதம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலுக்குள் இந்த கல்வி நிறுவனங்கள் வர வேண்டும் என்பதற்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தை 'இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' ஆக அறிவித்தால், மாநில அரசு தற்போது வழங்கிவரும் 69% இட ஒதுக்கீடு என்ன ஆகும் என கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி இது தொடர்பாக விவாதிக்க மாநில அமைச்சரவையின் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆனால், இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு ஏதும் நேராது என முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தவிர, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக மாநில அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், நவம்பர் 19ஆம் தேதி நடந்த அமைச்சரவையில் இந்த விவகாரம் குறித்து என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்துக் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தை, அண்ணா பல்கலைக்கழகம் (இன்ஸ்ட்டியூட் ஆஃப் எமினன்ஸ்), அண்ணா பல்கலைக்கழகம் என இரு பல்கலைக்கழகங்களாகப் பிரிப்பது என்றும் இதற்கேற்றபடி 1978ஆம் ஆண்டின் அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்குவதென்றும் முடிவெடுப்பது குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இம்மாதிரி அண்ணா பல்கலைக்கழகத்தை 'இன்ஸ்ட்டியூட் ஆஃப் எமினன்ஸ்' என அறிவித்தால், மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை என்னவாகும் என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்பது என்றும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை வைத்து முடிவெடுப்பது என்றும் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும்படி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்திய அரசிற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு டிசம்பர் 4ஆம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில், இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் அந்தஸ்து வழங்கப்பட்டாலும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆகவே, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் பி. ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.வி. அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதிகாரிகள் தரப்பிலிருந்து செலவினங்கள் துறைச் செயலர், சட்டத்துறை செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: