You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பர்வேஸ் முஷாரஃப் துரோகி அல்ல" - பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் பர்வேஷ் முஷாரஃபிற்கு ராஜ துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முஷரஃப் 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜ துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷரஃப் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது.
அவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷாரஃப் ஆவார்
நீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார்.
முன்னாள் ராணுவத் தளபதியான முஷாரஃப் ஒரே ஒரு முறைதான் அந்த வழக்கின் விசாரணைக்கு வந்தார். ராஜ துரோக வழக்கில் முஷரஃப் மீது குற்றம்சாட்டப்பட்டபோது அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. மேலும் அவர் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக முஷாரஃப்மேல்முறையீடு செய்யலாம். ஆனால், மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் அவர் பாகிஸ்தானுக்கு நாடு திரும்பி நீதிமன்றத்துக்கு நேரடியாக வர வேண்டும்.
நாட்டின் அரசமைப்பை மீறியதற்காக ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை.
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை வலுமைப்படுத்தும் ஒரு தொலைதூர முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் எந்த ஒரு ராணுவத் தளபதியும் இம்மாதிரியாக செயல்படுவதை தடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த முடிவு பாகிஸ்தானில் நீதித்துறைக்கு உள்ள சுதந்திரத்தையும் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராணுவத்தை தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரஃப் 1999இல் ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, பாகிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஜூன் 2001இல் பாகிஸ்தான் அதிபராக பிரகடனம் செய்துகொண்டார். 2008இல் தேர்தல் தோல்விக்கு பின் நாட்டை விட்டு அவர் வெளியேறினார்.
"பர்வேஸ் முஷாரஃப் துரோகி அல்ல" - பாகிஸ்தான் ராணுவம்
பர்வேஸ் முஷாரஃப் எந்த தவறும் செய்யவில்லை என பாகிஸ்தான் ராணூவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் கூறி உள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பர்வேஸ் முஷாரஃப்க்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகுந்த வலியையும், வேதனையையும் தருகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
40 ஆண்டுகாலம் நாட்டுக்காக உழைத்த அவர் துரோகியாக இருக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசமைப்பின்படி உரிய நீதி வழங்கப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: