You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: இந்தி கற்பிக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது ஏன்? - விரிவான தகவல்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை விருப்பப்பாடமாகக் கற்பிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அதனைக் கைவிடுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று துவக்கிவைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், மாணவர்களுக்குக் கூடுதலாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியைப் பயில்வது கட்டாயமல்ல என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்குப் பிறகும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. மேலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை விருப்பப்பாடமாக கற்பிக்கும் முயற்சிகள் கைவிடப்படுவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
"இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்திக்குப் பதிலாகத் தெலுங்கைக் கற்பிக்க முடிவுசெய்திருக்கிறோம். ஏற்கனவே முடிவு செய்தபடி ஃப்ரெஞ்ச் மொழியைக் கற்பிப்பது தொடரும். இந்தி கற்பிக்க ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் தெலுங்கு கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்படும்" என பிபிசியிடம் கூறினார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்.
மாணவர்கள் கேட்டதால்தான் இந்தி கற்பிக்க முடிவுசெய்தோம். ஆனால், தி.மு.க. இதைத் தேவையில்லாமல் சர்ச்சையாக்கிவிட்டது என்கிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ. விஜயராகவன். "120 மாணவர்களின் சாபம் தி.மு.கவை சும்மா விடாது" என்கிறார் அவர்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, "இது தி.மு.க. தலைவருக்குக் கிடைத்த வெற்றி. அரசின் இந்த முடிவை தி.மு.க. வரவேற்கிறது. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டி அரசியல் செய்ததால்தான், அவை மாற்றப்படுகின்றன. ஆகவே இம்மாதிரி விவகாரங்களில் அரசியல் செய்வதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.
சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970ல் இருந்து செயல்படத் துவங்கியது.
பிற செய்திகள்:
- 30 கோடி சந்தாதாரர்களை பாதிக்கும் குறைபாட்டை சரிசெய்த ஏர்டெல் - நடந்தது என்ன?
- "குழந்தை என்னை அடித்தால்கூட அவர் தாங்கமாட்டார்" - சூடானில் இறந்த தமிழரின் மனைவி குமுறல்
- 200 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் - விவசாயிகளுக்கு கிடைப்பது என்ன?
- உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: