இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குகிறது கேரள அரசு

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: விஞ்ஞானி மீது பொய் வழக்கு - 1.3 கோடி இழப்பீடு வழங்க முடிவு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக, தவறாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் நம்பி நாராயணன் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார்.

இவர், இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாகவும், 1994ல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், விஞ்ஞானி நம்பிநாராயணனை கைது செய்து, கேரள போலீசார் சிறையில் அடைத்தனர். இவர், இரண்டுமாதங்கள், சிறையில் இருந்தார். இதற்கிடையே, இந்த வழக்கு, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்தது. தன்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கு, கேரள அரசு, இழப்பீடு தர வேண்டும் என, கேரளநீதிமன்றத்தில், நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரள அமைச்சரவை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

தினமணி : குழந்தைகள் ஆபாச படம்: மேலும் 65 போ் பட்டியல் தயாரிப்பு

குழந்தைகள் ஆபாச புகைப்படம் விவகாரம் தொடர்பாக, மேலும் 65 பேர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம், விடியோக்கள் ஆகியவற்றை பகிர்பவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இரு வாரங்களுக்கு முன் முகநூல் மூலம் குழந்தைகள் ஆபாச புகைப்படத்தைப் பகிர்ந்ததாக திருச்சியைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, மேலும் 65 பேர் பட்டியலை சென்னை பெருநகர காவல்துறைக்கும், மேற்கு மண்டல காவல்துறைக்கும் அனுப்பி உள்ளது. இதில் 40 போ் பட்டியல் சென்னை காவல்துறைக்கும், 25 போ் பட்டியல் மேற்கு மண்டல காவல்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் போலீஸார், அவா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Circulation Of Child Pornography: TN Police Arrests Tiruchi Man

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்ட நார்வே பெண் இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவு

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டை சேர்ந்த 71 வயது மூதாட்டி இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

யானே மெட்டே ஜொஹன்சன் இதுவரை ஐந்து முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரது விசா 2020 மார்ச் மாதம் முடிவடைகிறது.

போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக யானே, குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால், கொச்சியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார் யானே.

இதுகுறித்து, ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், "ஊடகங்களில் இந்திய அரசிற்கு எதிராக பேசியதால், அவர் விசா விதிகளை மீறிவிட்டார். இதனால் அவர் இங்கு தங்க முடியாது என்பதால், அவரை வெளியேற உத்தரவிட்டதாக" கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: