You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரோ சிவன் படிப்பில் எப்படி? நினைவுகூரும் கணக்கு ஆசிரியர்
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இஸ்ரோ தலைவர் சிவன் அதிகம் செலவிடும் இடம் நூலகம்தான். அவர் ஒரு நாளிதழை குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் படிப்பார் என்கிறார்கள் நாகர்கோவில் மாவட்டம் சரக்கல்விளை கிராம மக்கள்.
இந்த சிறிய கிராமத்தில்தான் சிவன் பிறந்தார். அங்குள்ள அரசு பள்ளியில்தான் பயின்றார். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிவன் குறித்து சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அந்த விஷயத்தை அவ்வளவு பூரிப்பாக பகிர்ந்து கொள்கிறார்கள் அம்மக்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய ஒவ்வொருவரும், "சிவன் இந்த கிராமத்தில் பிறந்தது. இந்த ஊருக்கே பெருமை” என பெருமிதம் கொள்கின்றனர்.
சிவன் பிறந்த வீடு
சிவன் பிறந்த வீட்டுக்கு சென்றோம். இப்போது அந்த வீட்டில் சிவன் சகோதரர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சிவன் குறித்து அவரது நண்பர் மதன், "எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில்தான் அதிக நேரம் சிவன் அண்ணன் இருப்பார். நாளிதழ்களில் வரும் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அதிகம் படிப்பார். குறைந்தபட்சம் ஒரு நாளிதழை இரண்டு மணிநேரம் படிப்பார். அந்த அளவுக்கு ஆழமாக ஒவ்வொரு கட்டுரைகளையும் அவர் படிப்பார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'மகிழ்ச்சி, வேதனை, ஆறுதல்'
சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்த அகிலன், "சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டதை நான் நேரடியாக பெங்களூரு சென்று பார்த்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. சந்திரயான் நிலவில் இறங்கும் நிகழ்வை நாங்கள் ஊர்மக்கள் அனைவரும் ஆர்வமாக தொலைக்காட்சியில் பார்த்தோம். எல்லாம் சரியாக நடந்தது என நாங்கள் மகிழ்வாக இருந்த தருணத்தில், கடைசி 15 நிமிடத்தில் நடந்தது எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. சிவன் அண்ணன் அழுதது எங்களுக்கு வருத்தம் தந்தது" என்கிறார்.
அதே நேரம் பிரதமர் நரேந்திரமோதி, சிவனை அரவணைத்து ஆறுதல் கூறியது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறுகிறார் அவர்.
'கலங்கிவிட்டோம்'
சிவன் அழுதபோது அவர்கள் அனைவரும் கலங்கிவிட்டதாக கூறுகிறார் சிவனின் சித்தப்பா சண்முகவேல்.
அவர், "சிவன் சிறு வயதிலிருந்தே ஒரு நல்ல பையன். கடுமையாக உழைக்கக் கூடியவர், ஒழுக்கமானவர், நேர்மையானவர். இந்த பண்புகள் வருங்காலங்களில் அவருக்கு நிச்சயம் வெற்றியை கொண்டுவரும் என்றுதான் நம்புகிறேன்." என்கிறார்.
சிவன் திட்டு வாங்கியதே இல்லை
அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் சிவன் என்கிறார் அவரது கணக்கு வாத்தியார் கணேசன்.
"கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார். நான் வகுப்பறையில் சிவனை திட்டியதோ அல்லது அவருக்கு தண்டனை வழங்கியதோ இல்லை." என்று அந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.
பிற செய்திகள்:
- 2008 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா தப்பியது எப்படி?
- லொஸ்லியா - கவின் காதலை ஏன் எதிர்க்கிறீர்கள்? - இயக்குநர் வசந்த பாலன் கேள்வி
- சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?
- "காசுக்காக மகளை விஜய் டிவிக்கு அனுப்பிவிட்டாயா என்கிறார்கள்” - லொஸ்லியாவிடம் தழுதழுத்த தந்தை
- "பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆபத்து"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்