பொருளாதார நெருக்கடி: 2008 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா தப்பியது எப்படி?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய பொருளாதரத்தில் தற்போது ஒரு சிறிய மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய அம்சங்களும் இதற்கு ஒரு காரணம் என்கிறது அரசு. 2008-09ல் அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபோது, இந்தியா அதில் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. என்ன நடந்தது?

அமெரிக்க பொருளாதார பெருமந்தம் 2007 டிசம்பரிலிருந்து ஜூன் 2009வரை நீடித்தது. 2007ஆம் ஆண்டின் இறுதியிலேயே பொருளாதாரப் பெருமந்தம் துவங்கிவிட்டாலும், 2008ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில்தான் இதன் தாக்கம் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குச் சந்தை நிறுவனத்தின் வீழ்ச்சி, அமெரிக்க நிதிச் சந்தையில் முதன் முதலாக ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்கள் வீழ்ச்சியடைய, அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.

பொருளாதார பெருமந்தம் என்றால் என்ன?

ஒரு பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி பூஜ்யத்திற்குக் கீழே இருந்தால் அது பொருளாதார பெருமந்தம் என கருதப்படுகிறது. 2007 -08ல் உலகின் பல நாடுகளிலும் நடந்தது அதுதான்.

2008ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உலகில் மொத்தமாக 25 நாடுகள் பொருளாதார மந்தத்தில் சிக்கின. 2009ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உச்சகட்டமாக 59 நாடுகள் மந்த நிலையில் சிக்கியிருந்தன.

மிகச் சில நாடுகளே இந்தப் பொருளாதார பெருமந்தத்தில் இருந்து தப்பின. ஆஸ்திரேலியா, பொலிவியா, சீனா, கொலம்பியா, இந்தியா, இந்தோனீசியா, மால்டோவா, போலந்து, ஸ்லவோகியா, தென் கொரியா, உருகுவே நாடுகள்தான் அவை.

சிக்கல் எப்படித் துவங்கியது?

90களின் இறுதியில் ஆசியச் சந்தைகளில் ஏற்பட்ட நிதிப் பிரச்சனை, ரஷ்ய கடன் பிரச்சனை ஆகியவற்றை அடுத்து அமெரிக்கச் சந்தையில் நிதி குவிய ஆரம்பித்தது.

இதையடுத்து கட்டுமானத் தொழில் வேகமெடுத்தது. பலரும் கடன் வாங்கி வீடுகளில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

இதனால், வீடுகளின் விலை ஏகத்திற்கும் அதிகரித்தது. இந்தக் கடன்களைக் கொடுத்த வங்கிகள், இதனை முதலீட்டுப் பத்திரங்களாக மாற்றின. இதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வீடுகளின் விலை அதிகரிக்காமல், குறைய ஆரம்பிக்க முதலீடு செய்த நிறுவனங்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க ஆரம்பித்தன. வீடுகளின் விலை எந்த வேகத்தில் அதிகரித்ததோ, அதே வேகத்தில் குறைய ஆரம்பித்தது.

மற்றொரு பக்கம் வீடுகளை வாங்கிய பொதுமக்கள் தாங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பு, அந்த வீட்டின் மேல் வாங்கப்பட்ட கடனின் மதிப்பைவிட குறையத் துவங்குவதை உணர்ந்தனர். அதனால், வீட்டை விற்று கடனை முன்கூட்டியே அடைக்க முயன்றனர்.

இதையடுத்து, வீடுகள் பெரும் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்தன. இது பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியது. இதனால் பலர் வீடுகளையும் சொத்துகளையும் இழந்தனர்.

முதலில் வீட்டுவசதித் துறையில் துவங்கிய இந்தப் பிரச்சனை, பிறகு பொருளாதாரத்தின் பிற துறைகளையும் பாதிக்க ஆரம்பித்தது.

கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பிரச்சனையே இந்த பொருளாதர பெருமந்தத்திற்குக் காரணமாக அமைந்தது என்றாலும், 1970களில் அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்தான் முக்கியமான காரணம் என பிறகு உணரப்பட்டது.

1970களில் துவங்கி, பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்த ஆரம்பித்தது. இதனால், முதலீட்டு வங்கிகள் பெருகின.

Hedge fund எனப்படும் சிக்கலான முதலீட்டு முறைகளும் பெருகின. இவை தாங்கள் வழங்கும் கடன்கள், திரும்ப வராமல் போனால் தாங்கும் திறனற்றவையாக இருந்தன.

பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபோது இவை எல்லாம் அழிவை நோக்கி நகர ஆரம்பித்தன. 2008 செப்டம்பர் 15ஆம் தேதி மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் திவாலானதாக அறிவித்தது.

உடனடியாக அமெரிக்க அரசு தலையிட்டு, பல நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தது என்றாலும், வேலையிழப்பு, வீடுகளைவிட்டு ஆட்கள் வெளியேற்றப்படுவது, நிறுவனங்கள் மூடப்படுவது ஆகியவை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.

இந்தப் பொருளாதார பெருமந்தத்தினால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008ல் மைனஸ் 0.01ஆகவும் 2009ல் மைனஸ் 2.5ஆகவும் குறைந்தது.

இந்தப் பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா பாதிக்கப்பட்டதா?

இந்தியாவைப் பொறுத்தவரை 1991ல் உலகமயமாக்கப்பட்டுவிட்டாலும், வங்கித் துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கவேசெய்கின்றன.

அதேபோல பங்குச் சந்தையும் கடுமையான கண்காணிப்பிற்குக் கீழேயே இருக்கிறது. இதனால், 2008-09 அமெரிக்கப் பொருளாதார பெருமந்தத்தால் இந்தியப் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால், அதிர்வுகள் இருந்தன.

2008 அக்டோபரில் இந்தியாவின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. 2008 டிசம்பரிலிருந்து இறக்குமதியிலும் சிக்கல்கள் ஏற்பட்டன. 2008 அக்டோபரிலிருந்து 2009 டிசம்பர் வரை ஏற்றுமதி - இறக்குமதியில் 20 சதவீதம் சுருங்கியது. அதற்கடுத்த காலகட்டத்தில் ஏற்றுமதி - இறக்குமதியில் 28 சதவீதம் சுருக்கம் இருந்தது.

இந்தப் பெருமந்தத்தின் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் சரிவைச் சந்தித்தது. 2007ல் 9.8ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2008ல் 3.9ஆக வீழ்ந்தது. ஆனால், அடுத்த ஆண்டே இந்தச் சரிவிலிருந்து மீண்டு, 10.3 சதவீதத்தை எட்டியது.

இந்தியா பாதுகாக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

"பல காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக இந்தியாவிற்குள் பணம் வரும்போது முதலீட்டிற்காக வரும் பணத்தைத் தவிர மற்ற நிதி அனைத்தும் ரூபாயாக வர வேண்டும். வெளியில் எடுத்துச்செல்லும்போதும் ரூபாயிலிருந்து டாலராக மாற்றி எடுத்துச்செல்ல வேண்டும்.

இதை partial convertablity என்பார்கள். பிற நாடுகளில் full convertability இருந்தது. இந்த full convertability கொண்ட நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

காரணம், முதலீட்டாளர்கள் உடனடியாக பணத்தை சந்தையிலிருந்து வெளியில் எடுத்துச் சென்றுவிட முடியும். இந்தியாவில் அது முடியாது. அது முக்கியமான காரணம்" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.

மேலும், மற்ற நாடுகள் கடன் வாங்கும்போது பொதுச் சந்தையில் டாலர்களாக கடன் வாங்கின. இந்தியா அதைச் செய்வதில்லை. அதற்கடுத்தபடியாக இந்தியாவின் வங்கி அமைப்பு அப்போது மிக வலுவானதாக இருந்தது. தவிர, அரசு தொடர்ந்து தலையீட்டு, சரிவு ஏற்படாமல் தடுத்துவந்தது என நினைவுகூர்கிறார் ஜோதி சிவஞானம்.

"அந்த காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனங்களுக்கு மூன்று வரிச்சலுகைகளை அறிவித்தார். இது பெரிய ஊக்கமளித்தது. மேலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அப்போது முதலீடு என்பது 36 சதவீதம் இருந்தது. இதெல்லாம் அந்த நேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றின" என்கிறார் ஜோதி சிவஞானம்.

ஆனால், 2011க்குப் பிறகு, உலகப் பொருளாதார மந்தத்தின் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல மெல்ல எதிரொலிக்க ஆரம்பித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6 - 5 சதவீதம் எனக் குறைய ஆரம்பித்தது.

தவிர, அப்போது கொடுக்கப்பட்ட வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படாமல் நீண்ட காலம் நீடித்ததால், வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

"இப்போதும் நமது வங்கி அமைப்பு கட்டுப்பாடுகளுடன், பாதுகாப்பாகவே இருக்கிறது. ஆனால், அரசின் தலையீடு நல்லவிதமாக இருக்க வேண்டும். தவிர, உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டின் சதவீதம் தற்போது வெறும் 27 சதவீதம்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் ஜோதி சிவஞானம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: