சந்திரயான் 2:' விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை' - தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை வழங்குகிறோம்.

தினமணி: 'லேண்டர் சாதனம் நொறுங்கவில்லை'

லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

"சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது. ஆனால், அது உடைந்துவிடவில்லை. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி அளிக்கிறது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. தரை இறங்கத் திட்டமிட்டிருந்தப் பகுதிக்கு அருகில் லேண்டர் விழுந்துள்ளது.

லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இதில் ஈடுபடுவதற்கு 14 நாட்கள் வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் இழந்த தகவல் தொடர்பை மறுபடியும் மீட்ட நிகழ்வுகள் உண்டு. அது போல லேண்டருடன் தகவல் தொடர்புக்காக முயற்சிக்கிறோம். நமது முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது" என்று விஞ்ஞானிகள் கூறியதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர்: தென் இந்தியாவில் தாக்குதல் அபாயம்

இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில் கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து தென் இந்தியா முழு அளவில் அலர்ட்டாக இருக்குமாறு உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ராணுவ தென்பகுதி லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர் எஸ்.கே. சைனி கூறுகையில், சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்று சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .இதில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது. மேலும் ராணுவம் முழு அளவில் எதனையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. சதித்திட்டம் ஏதும் இருந்தால் அது சரியான வழியில் முறியடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த 2008ல் செப்.26 ல் மும்பையில் நடந்த தாக்குதல் போல் ஏதும் நடக்கக்கூடுமோ என்ற அச்ச சூழல் எழுந்துள்ளது. படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரா, ஆந்திரா, கர்நாடாகா, தமிழகம், கேரள பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - '1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - கமல்நாத் மீது விசாரணை மீண்டும் துவக்கம்'

1984-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்தவுடன் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய பிரதேச மாநில முதல்வரான கமல்நாத்துக்கு உள்ள தொடர்பு பற்றிய வழக்கு விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் துவங்கியுள்ளது என்ற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள், கமல்நாத்திற்கு எதிராக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால், தனக்கும் சீக்கிய கலவர வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கமல்நாத் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மத்தியபிரதேச மாநில முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மீண்டும் இந்த பிரச்சனை கிளம்பியது. அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எதிராக சில சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்தின.

1984 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் மற்றும் கமல்நாத் ஆகியோர் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கமல்நாத்தும், உள்துறை வளையத்துக்குள் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது குறித்து அந்த பத்திரிகை விவரித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: