You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கி தவறுதலாக செலுத்திய லட்சம் டாலர்களை செலவழித்த தம்பதி மீது வழக்கு மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான டாலர்கள் பணம் செலுத்திவிட, அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துவிட்டனர்.
ராபர்ட் மற்றும் டிஃபனி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டாலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக செலுத்தியது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோதி கேமராவைப் பார்த்துதான் சிவனுக்கு ஆறுதல் சொன்னாரா?
செப்டம்பர் 7ஆம் தேதி சந்திரயானின் விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று முதலில் இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோதிக்குத் தெரிவித்தபோது, மோதி அவரிடம் ஏதோ பேசி சென்றுவிட்டார் அல்லது ஆறுதல் சொல்லவில்லை என்றும் ஆனால் இருவரும் கேமரா முன் வந்தபோது, கண்ணீர் சிந்திய சிவனை மோதி கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார் என்றும் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த வீடியோ குறித்து பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு ஆராய்ந்தது. எங்கள் ஆய்வில் இந்த கூற்று தவறானது என்றும், தூர்தர்ஷன் நியூஸ் நேரடி ஒளிபரப்பின் இரண்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்த்து, இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தோம்.
தூர்தர்ஷன் செய்திகளின் முழு நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும்போது, இரு சந்தர்ப்பங்களிலும் பிரதமர் மோதி இஸ்ரோ தலைவர் மற்றும் அவரது குழுவின் விஞ்ஞானிகளுக்கு தைரியம் கொடுத்தார் என்பது தெளிவாகிறது.
முத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து பேசியது என்ன?
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.
தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்று வரலாற்று சாதனை
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் (சிட்டகாங்) நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா சதமடித்தார்.
தொடர்ந்து பேட் செய்த வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மேலும் படிக்க: வங்கதேசத்தை வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை
அசோக் லேலண்ட் சென்னை ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்
இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கனரக வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கு குறைந்த தேவை இருப்பதால், வாகனங்கள் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எண்ணூர் பகுதியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வேலையில்லாத நாட்களாகவும், ஓசூர் பகுதியில் உள்ள ஆலையில் ஐந்து நாட்கள் உற்பத்தி பணிகளை நிறுத்தியுள்ளதாக மும்பை பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"லேலண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து பிரதான ஆலைகளில் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என லேலண்ட் நிறுவனம் தெரிவித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
மேலும் படிக்க: அசோக் லேலண்ட் சென்னை ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்