You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசோக் லேலண்ட் சென்னை ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்
இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கனரக வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கு குறைந்த தேவை இருப்பதால், வாகனங்கள் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எண்ணூர் பகுதியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வேலையில்லாத நாட்களாகவும், ஓசூர் பகுதியில் உள்ள ஆலையில் ஐந்து நாட்கள் உற்பத்தி பணிகளை நிறுத்தியுள்ளதாக மும்பை பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"லேலண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து பிரதான ஆலைகளில் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என லேலண்ட் நிறுவனம் தெரிவித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பந்தனாகர் ஆலையில் 18 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாந்திரா ஆலை மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் ஆலையில் பத்து நாட்கள் தயாரிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் செப்டம்பர் மாதத்தில் மிகவும் நெருக்கடியான சூழலில் மாட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள்.
''நிரந்தர ஊழியர்களுக்கு பாதி சம்பளம் தருவதாக உறுதியளித்துள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அலவன்ஸ் தொகை அளிக்கப்போவதில்லை என கூறிவிட்டார்கள். ஒப்பந்த ஊழியர்களின் நிலை இன்னும் மோசம். பலரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிரமத்தில் உள்ளோம்,'' என்கிறார் அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர் கே. சுரேஷ்.
லேலண்ட் நிறுவன ஊழியர்களின் வேலைநாட்கள் குறைந்துள்ளதால், எண்ணூர் பகுதியில் ஆலைக்கு அருகில் உள்ள சிறிய உணவகங்களும் நஷ்டத்தை சந்திக்கின்றன என்கிறார் அவர்.
''ஆலை பணியாளர்களை நம்பி உணவகம் நடத்துபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்கிறார் சுரேஷ்.
கடந்த இரண்டு மாதகாலமாக இந்தியாவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கூறிவந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை ரீதியாக முதலீட்டர்களை சந்தித்துவருவதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்