You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு: கைதான நபரின் காணொளி வெளியானது
கோவையில் 11ஆம் வகுப்பு படித்துவந்த மாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த வழக்கில், சிறையில் இருக்கும் மணிகண்டன், காவல் துறையில் சரண் அடைவதற்கு முன்னர் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் இவர். மனித உரிமைகள் ஆணையம், மாநகரக் காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அந்தக் காணொளி மூலம் மணிகண்டன் சில வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர், நவம்பர் 26ஆம் தேதியன்று தனது பிறந்தநாளைக் கொண்டான ஆண் நண்பர் ஒருவருடன் அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை செல்போனில் காணொளியாகப் பதிவு செய்து மாணவியை மிரட்டியுள்ளனர் எனவும் கோவை மாநகரக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, மணிகண்டன், பப்ஸ் கார்த்திக் ஆகிய ஆறு பேரை குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தடுப்புச் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன், காவல் துறையில் சரண் அடைவதற்கு முன்னர் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணொளியில் மணிகண்டன் பேசியுள்ளது என்ன?
"பதினொன்றாம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. போலீஸ் தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த பெண்ணை நாங்கள் கூட்டி சென்று மீண்டும் இறக்கி விட்ட காட்சிகள் அருகில் உள்ள கடைகளில் இருந்த கேமராக்களில் பதிவாகியிருக்கும். அதை ஆய்வு செய்ய வேண்டும். நான் நிரபராதி என்பதை நிறுபிக்க டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன்."
"மாணவியோடு இருந்த அவரது நண்பரிடமும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும். காவல்துறையினரிடம் சரணடைந்தால் கைகள் உடைக்கப்படும் அல்லது என்கவுண்டர் செய்யப்படுவேன் எனவும் அச்சுறுத்துகின்றனர்."
"நான் பேசும் இந்த காட்சிதான் என்னுடைய கடைசி பேச்சாகவும் இருக்கலாம். அந்த பெண் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் இருக்கிறது. அந்த பெண் பற்றி அந்த பகுதியில் விசாரிக்க வேண்டும். தவறான வழக்கில் எந்த தவறும் செய்யாத என்னையும் மற்றவர்களையும் போலீஸார் சிக்க வைத்துள்ளனர். எனவே மனித உரிமை ஆணையம் இதில் தலையிட்டு எங்களை காப்பாற்ற வேண்டும்," என கேட்டுக்கொண்டுள்ளார் மணிகண்டன்.
என் குடும்பத்தினர், அக்கா, குழந்தைகள் ஆகியோரை நான் மீண்டும் பார்க்க விரும்புகிறேன் என்றும் அவர் அந்தக் காணொளியில் பேசியுள்ளார்.
மேலும் ஒருவர் கைது
இந்த வழக்கில் மேலும் ஒருவர், இன்று, சனிக்கிழமை கைது செய்யப்பட்டள்ளார்.
இவ்வழக்கில் முன்னரே ஆறு பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 29 வயதாகும் மணிகண்டன், முன்னரே கைது செய்யப்பட்ட மற்றொரு மணிகண்டனின் உறவினர் ஆவார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: