நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தது உண்மையா?
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தது உண்மையா?

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தியதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டதாக கூறுகிறது தினமலர் நாளிதழ் செய்தி.
நடிகர் அஜித் வீடு, திருவான்மியூர் வால்மிகி நகரில் உள்ளது. இவரது மேலாளர் சுரேஷ் சந்திரா. இவர் வீட்டில் மலைப்பாம்பு குட்டி வளர்ப்பதாகவும், வெள்ளை எலி உணவாக கொடுப்பதாகவும் தகவல் பரவியது.
சுரேஷ் சந்திராவின் வீட்டு முகவரி தெரியாததால், நடிகர் அஜித் வீட்டிற்கு வனத்துறையினர் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் அஜித் வீட்டில் மலைப்பாம்பு இருப்பதாகவும், வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி மோகனிடம் கேட்டபோது, "நாங்கள் நடிகர் அஜித் வீட்டிற்குள் நுழையவில்லை. சோதனை நடத்தியதாக வந்த தகவலில் உண்மை இல்லை" என்று கூறியதாக மேலும் அந்த செய்தி விவரிக்கிறது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபர் மரணம்

பட மூலாதாரம், Getty Images
ஷோலவரத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கவுன்சிலர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பணியாளர் ராஜேந்திரன் அந்த அலுவலகத்திலேயே உயிரிழந்ததாக ’தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பகுதிக்கான சீட் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தவுடன் ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எருமைவெட்டிபாளையம் கிராமத்தின் வார்ட் 11க்கான கவுன்சிலர் பதவிக்கான சீட் தமிழ் மாநில கட்சியின் லதா என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ராஜேந்திரனும், அவரது ஆதரவாளர்களும் அலுவலகத்திற்கு வெளியே நின்று ஆலோசித்து கொண்டிருந்தபோது, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவர் அவசர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டது.

தினமணி: "மாணவா்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் அரசை தோ்ந்தெடுங்கள்"

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவா்கள் போராடி வரும் நிலையில், 'மாணவா்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் அரசை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்' என்று ஜார்க்கண்ட் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5 கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், 5-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்தல் நடைபெறும் பாகுா் பகுதியில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரியங்கா புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், தில்லி உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் மாணவா்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், மாணவா்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இச்சட்டத்துக்கு எதிராக மாணவா்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனா். காவல்துறையினரின் தடியடியையும் அவா்கள் எதிர்கொண்டு வருகின்றனா். மாணவா்கள் கருத்துக்கு மதிப்பளிக்கக் கூடிய, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடிய, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கூடிய அரசை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்.
ஜார்க்கண்ட் பாஜக அரசு, பழங்குடியினரின் நிலத்தை பணக்காரா்களுக்கு தாரை வார்த்து வருகிறது. பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சிதான் எப்போதுமே பாதுகாத்து வந்துள்ளது என்றார் பிரியங்கா.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












