ஜெர்மனியில் வீடில்லை; வேலையில்லை - திட்டமிட்டு சிறைக்கு சென்ற முதியவர்

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Google

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

சிறைக்கு செல்வதற்கு விரும்பிய வீடில்லாத ஜெர்மானியர் ஒருவர் மிதிவண்டியில் சென்ற ஒருவரை காரால் மோதியுளளார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வீடு இல்லாமலும், வேலையில்லாமலும் வாழ்ந்து வந்த இந்த நபர், மிதிவண்டியில் சென்றவரை, சிறை செல்லும் நோக்கில் வேண்டுமென்றே காரால் மோதியதால் ஜெர்மனி நீதிமன்றம் ஒன்று இவருக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

ஜெர்மனியிலுள்ள வட பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லோவர் சாக்சோனியில், மிதிவண்டி பாதை ஒன்றில் நடைபெற்ற இந்த விபத்தில், மிதிவண்டி ஓட்டி சென்றவர் கடும் காயமடைந்தார்.

காரை மோதிய 62 வயதான இந்த மனிதர், எப்படியாவது சிறைக்கு செல்ல வழிதேடியதாக ஓல்டன்பர்க் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பேராசையால் இந்த மனிதர் இவ்வாறு செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கணினி அறிவியல் படித்து வேலை செய்து வந்த இவர் தனது வேலையை எவ்வாறு இழந்தார் என்றும், பின்னர், ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்று தனது சேமிப்புகள் அனைத்தையும் எவ்வாறு செலவிட்டார் என்றும் இந்த நீதிமன்றம் விசாரித்தது.

இந்த விபத்தை ஏற்படுத்தியபோது, அவருக்கு வீடு இல்லை. அவரது காரின் உரிமமும் காலாவதி ஆகியிருந்தது.

மதிவண்டி ஓட்டி செல்லும் ஒருவர்

பட மூலாதாரம், Getty Images

மிதிவண்டி பாதையில் 48 வயதான மிதிவண்டி ஓட்டி வந்தவர் மீது காரை செலுத்தி மோதியுள்ளார்.

இவரது செயல்பாடும், சிறையில் நிரந்தர பராமரிப்பு பெறுவதற்கான பேராசை மிக்க இவரது நோக்கமும் மோசமானது என்பதால், கொலை முயற்சி செய்தார் என எடுத்துகொள்ள முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தால் ஏற்பட்ட மனநல மற்றும் உடல் நல உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் இன்னும் அல்லலுற்று வருகிறார்.

தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்த நபர், தனது ஓய்வூதியத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: