வெங்காயம்: புதுச்சேரியில் இரண்டு மூட்டை திருடியவர் பிடிப்பட்டார் - விரிவான தகவல்கள்

வெங்காயம் திருடியவர் சிக்கினார்

தொடர் மழையால் வெங்காயம் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மார்கெட்டில் இரண்டு மூட்டை வெங்காயம் திருடியவர் சிக்கினார்.

மேலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வழக்கமாக இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள் வழக்கம் போல கொள்முதல் செய்ய முடியாததால் வெங்காயத்தின் அளவு டன் கணக்கில் குறைந்து, இதுவரை இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

விலையுயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

வெங்காயம் திருடியவர் சிக்கினார்

இந்நிலையில் புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதி பெரிய மார்கெட்டில், வழக்கம் போல வியாபாரிகள் வெங்காயம் மூட்டைகளை லாரிகளில் இருந்து இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இறக்கி வைக்கப்பட்ட வெங்காயம் மூட்டை ஒன்றைத் திருடிச் சென்று பதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் மற்றொரு மூட்டையைத் திருட முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அந்த நபரைப் பிடித்து அங்குள்ள தூண் ஒன்றில் கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் வெங்காய மூட்டையை திருடிய நபரைக் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திருடியவரின் பெயர் சக்திவேல் என்றும், புதுச்சேரி முத்திரைப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

வெங்காயம் திருடியவர் சிக்கினார்

வெங்காயம் திருட்டு சம்பவம் குறித்து கடை உரிமையாளர் வேல்முருகன் கூறும்போது, "வழக்கம் போலப் பெங்களூரிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெங்காய மூட்டைகளை லாரிகளில் இருந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி பக்கத்துக் கடையில் உள்ள குடோனிற்கு வைக்கச் சென்றுள்ளனர்.

அப்போது கடைக்கு வெளியிலிருந்த வெங்காயம் மூட்டை ஒன்றைக் காணவில்லை, பிறகு தேடிப்பார்த்து மறுபடியும் மூட்டைகளை இறக்கத் தொடங்கிய போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்துக் கேட்டபோது, அவர் தான் வெங்காய மூட்டையைத் திருடிச்சென்றவர் என்றும் மீண்டும் வெங்காய மூட்டையைத் திருடுவதற்காக அங்கு வந்தது எங்களுக்குத் தெரியவந்தது, பிறகு அந்த நபரைப் பிடித்துக் கட்டிவைத்துவிட்டோம்," என்றார்.

"இங்கே இதுபோன்று பலமுறை திருட்டு நடந்துள்ளது எங்களுக்கு யார் திருடுகின்றனர் என்று தெரியாததால் அதை விட்டுவிட்டோம், ஆனால் இன்று இவரைப் பிடித்து விசாரித்ததில் இதற்கு முன்பு நடந்த காய்கறி திருட்டுகளுக்கு இவர்தான் காரணம் என்று தெரியவந்தது. மேலும் திருடிய நபர் ஏற்கனவே திருடிச்சென்ற வெங்காயம் மற்றும் பூண்டு மூட்டைகளுக்கான பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லியுள்ளார்.

இதுபோன்று நிறையச் சம்பவங்களைத் தடுக்க மார்கெட் பகுதியில் காவல்துறையினர் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட்டால் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: