தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: நாளை காலை தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமையன்று காலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 - டிசம்பர் 30 ஆகிய என இரு கட்டங்களாக நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் ஆறாம் தேதி துவங்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தது. அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, முறையாக இட ஒதுக்கீடு செய்யப்படவில்லையென தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது. சரியான முறையில் இட ஒதுக்கீடு செய்த பிறகு, தேர்தலை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக தேர்தல் ஆணைய அலுவலகம்

இந்த நிலையில்தான் டிசம்பர் 2ஆம் தேதியன்று ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை அறிவிக்க வேண்டுமென கூறினர்.

தி.மு.கவின் சார்பில் இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், 9 மாவட்டங்களின் எல்லைகள் மாறியிருக்கின்றன. அந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மேலும், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தாமல் மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.

இநத் வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''வார்டுகளை மறுவரையறை செய்யாமல் தேர்தலை அறிவித்துள்ளனர். அனைத்து சட்டரீதியான நடைமுறைகளையும் முடித்த பிறகே தேர்தலை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 9 மாவட்டங்களாகியுள்ளன. அங்கு வார்டுகளை மறுவரையறை செய்யவில்லை. இது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

"தொகுதி மறுவரையறை, தனித்தொகுதி ஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் 2011ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிந்துவிட்டது. புதிதாகப் பிரித்த மாவட்டங்களுக்கென புதிதாக வார்டு மறுவரையறை தேவையில்லை" என மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

வார்டுகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுவரையறை செய்வதால், மேலும் புதிய மாவட்டங்களை பிரித்தாலும் பாதிப்பு ஏற்படாது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து, விவரங்கள் வெளியிடப்படும்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியது.

உள்ளாட்சி தேர்தல்

பட மூலாதாரம், ARUN SANKAR/GETTY IMAGES

தி.மு.க. தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, உள்ளாட்சி அமைப்புகளில் பல இடஒதுக்கீடுகள் உள்ளன. எனவே புதிய மாவட்டங்களாகப் பிரிக்கும்போது இதில் பல விஷயங்கள் விட்டுப்போகக்கூடும். எப்போதோ செய்த தொகுதி மறுவரையறையை இப்போது செய்ததுபோல தேர்தல் ஆணையம் கூறுகிறது. அது தவறு என வாதிட்டார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார். அவர் வாதிடும்போது, ஏற்கனவே தேர்தலை சீக்கிரம் நடத்தும்படி உத்தரவு உள்ளது. தற்போது, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி வார்டுகள் பிரிக்கப்பட்டுவிட்டன என்று கூறினார். புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்தால் இன்னும் கால தாமதம் ஆகுமென்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போது அனைத்து எல்லைகளும் மாறியிருக்கும். ஆகவே, ஏற்கனவே மறுவரையறை செய்து விட்டோம் என்று எப்படிச் சொல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

வேண்டுமானால் 9 மாவட்டங்களுக்கு தேர்தலை தள்ளி வைக்கலாம்; பிற இடங்களில் நடத்தலாம் என தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது. தி.மு.க. தரப்பில் அதனை ஏற்கவில்லை.

இதற்குப் பிறகு நீதிபதிகள், ஒன்று மாவட்டங்கள் பிரித்ததை ரத்து செய்யுங்கள் அல்லது 9 மாவட்டங்களில் தேர்தலைத் தள்ளிவையுங்கள் என்று கூறினர். தமிழக அரசின் சார்பில், 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைத்துவிட்டு பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்த சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவை இந்த ஒன்பது மாவட்டங்கள்.

தி.மு.க. தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென தி.மு.க. கோரியது.

இதற்குப் பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பர் 6ஆம் தேதி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கவிருக்கும் நிலையில், அன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :