You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலித் செயற்பாட்டாளர்கள் மீதான பீமா கொரேகான் வழக்கை கைவிட உத்தவ் தாக்கரே உறுதி
இன்று நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - தலித் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கை கைவிட உத்தவ் உறுதி
பீமா கொரேகான் சம்பவம் தொடர்பாக தலித் செயற்பாட்டாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கைக் கைவிடுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்தார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தம்மை சந்தித்த அமைச்சர்கள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் குழுவிடம் பேசும்போது இத்தகவலை முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரி 2-3 தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் பீமா-கொரேகான் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய பாஜக ஆட்சியில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
நவம்பர் 28-ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற உடன் ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிராகப் போராடியவர்கள், கொங்கன் பகுதியில் நானார் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறும்படி மாநிலத்தின் உள்துறையை அவர் கேட்டுக்கொண்டார் என்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய முந்தைய செய்திகள்:
பாஜக கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனை அந்தக் கட்சியுடன் உறவை முறித்துக்கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியமைத்தது. மதச்சார்பற்ற முறையில் ஆட்சி நடத்துவதாக அந்த ஆட்சியின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது, சிவசேனை பாஜக கூட்டணியில் இருந்து மட்டுமல்ல, பாஜகவின் கொள்கையில் இருந்தும் விலகி வருகிறதா என்ற விவாதம் அப்போதிருந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - திருட்டுப்போன வெங்காயம்
பெரம்பலூரில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிட வைத்திருந்த 42,000 ரூபாய் மதிப்புள்ள விதை வெங்காயம் திருடுப்போனது. என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
முத்துகிருஷ்ணன் என்னும் அந்த விவசாயி தனது மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிட வெங்காயத்தை வாங்கி வைத்திருந்தார்.
ஆனால் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் அவரால் அதை பயிரிட முடியவில்லை. எனவே விவசாயம் செய்ய தனது வயலில் மூட்டையாக வெங்காயங்களை வைத்திருக்கிறார். கடந்த வாரம் ஒரு லட்சம் மதிப்பிலான 1000கிலோ வெங்காயத்தை தான் வாங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தினமணி - எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
முன்னாள் பிரதமர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்யும் நோக்கில் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது என்கிறது தினமணி செய்தி.
இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தபோதும், மாநிலங்களவையில் சட்டத்திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பிரதமருக்கும் அவருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல் பிரதமர் பதவியிலிருந்து விலகியவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 5 ஆண்டுகள் வரை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும் என்று விவரிக்கிறது அச்செய்தி.
தினத்தந்தி - ஜூன் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மக்களவையில் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய உணவுப் பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் அதே ரேஷன் கார்டு மூலம் வாங்க முடியும். இதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் அதிக பலன் அடைவார்கள்.
ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள மின்னணு கையடக்க விற்பனை கருவிகளில் (பி.ஓ.எஸ்.) இணைத்த பின்னரே இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
எனவே இதற்கு வசதியாக மாநிலங்களில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் கையடக்க விற்பனை கருவிகள் வழங்கப்படுவதுடன், அந்த கடை முழுமையாக மின்னணு மயமாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் நாடு முழுவதும் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். என்று விவரிக்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: