You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மஹாராஷ்டிரா: தலித்- மராத்தா மோதலின் பின்னணி என்ன? - கள நிலவரம்
மஹாராஷ்டிராவில் இன்று நடந்த மாநிலம் தழுவிய பந்தின் போது, பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஜனவரி 1-ம் தேதி பூனே மாவட்டத்தின் பீமா கோரேகான் எனும் இடத்தில் நடந்த மோதலில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அங்கு கல்வீச்சுகள் நடந்ததுடன் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பிறகு பல தலித் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்தன.
ஆயிரக்கணக்கான தலித்துக்களும், டாக்டர் அம்பேத்கரை பின்பற்றுவோரும் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் பீமா கோரேகானில் உள்ள போர் நினைவிடத்திற்குச் செல்வார்கள்.
பீமா கோரேகான் சண்டையில், 1818 ஜனவரி முதல் நாளன்று பேஷ்வாக்கள் தலைமையிலான மராத்தாக்கள், மஹர் சிப்பாய்களைக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையிடம் தோற்றது.
மஹர் சமூகத்தினர் அப்போது தீண்டத்தாதவர்களாக நடத்தப்பட்டனர். 1927-ம் ஆண்டு இந்த நினைவிடத்தை டாக்டர் அம்பேத்கர் பார்வையிட்ட பிறகு, ஆதிக்க சாதி பேஷ்வாக்களின் அடக்குமுறைக்கு எதிரான வெற்றியாக மஹர் சமூகத்தினர் இந்த நாளை வெற்றி நாளாகக் கொண்டாட ஆரம்பித்தனர். ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இந்தச் சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
இந்த வருடம் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதால் மேலும் சிறப்புமிக்கதாக இருந்தது.
பீமா நதிக்கரையில் உள்ள நினைவிடத்தில் தங்களது நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் கூடியபோது, நினைவிடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வன்முறை ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டன, வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை ஒரு கும்பல் அடித்து உடைத்தது.
'' நிலைமை சில நேரத்திற்குக் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது. அப்பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். போலிஸாரை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இது பீதியை உருவாக்கியது'' என்கிறார் உள்ளூர் செய்தியாளர் தியானேஸ்வர் மெட்குலே.
''இரு குழுக்களும் நேருக்கு நேர் சண்டையிட்டன. பிறகு கல்வீச்சு தொடங்கியது. போலீஸார் உடனே களத்தில் இறங்கி, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் நிலைமையைக் கட்டுப்படுத்தியது. எங்கள் விசாரணையில், ஒருவர் இறந்ததும், 80 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேசமடைந்ததும் தெரியவந்துள்ளது. வன்முறையைத் தூண்டியது யார் என்பதைக் கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா காட்சிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். கூடுதல் விசாரணைக்காக சிலரை கைது செய்துள்ளோம்.'' என பிபிசியிடம் கூறினார் பூனே புறநகர் காவல் கண்காணிப்பாளர் சூவெஸ் ஹக்.
சில மணி நேரங்களில் நிலைமை கட்டுக்குள் வந்தது. நினைவு கூறல் நிகழ்வு மீண்டும் தொடங்கி தொடர்ந்து இரவு வரை நடந்தது. புரளிகள் பரவுவதைத் தடுப்பதற்கென்று கூறி, போலீசார் அப்பகுதியில் செல்பேசி சேவையை துண்டித்தனர்.
மோதலில் இறந்த நபரின் பெயர் ராகுல் ஃபதங்கலே, என்று கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அரசு, அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அங்கு நடைபெற்ற வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. "சத்ரபதி சம்பாஜி மஹராஜ் தூக்கிலிடப்பட்ட பிறகு, இறுதிச்சடங்கு செய்வதற்காக, அவரது உடலை வாங்கிய கோவிந்த் கெய்க்வாட்டின் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. மிலின்ட் ஏக்போட்டே மற்றும் சம்பாஜி பைடே ஆகியோருக்கு அதில் தொடர்புள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 49 பேரில், ஒன்பது பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த வாரம் நடந்தது. இது கோரேகான் பீமா வன்முறைக்கு வழிவகுத்ததா என்பதை கட்டாயம் விசாரிக்க வேண்டும்," என்று பி.ஆர்.அம்பேத்கரின் பேரனும், பா.ரி.பா பகுஜன் மஹாசங்கத்தின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.
வது கிராமத்தில், தலித் முன்னோடியான கோவிந்த் கெய்க்வாட்டின் நினைவாக ஒரு கொட்டகை போடப்பட்டு, தகவல் பலகை வைக்கப்பட்டது. சத்ரபதி சம்பாஜி மற்றும் கெய்க்வாட்டை வரலாற்றுப்பூர்வமாகத் தொடர்பு படுத்துவதை சில உள்ளூர்வாசிகள் விரும்பவில்லை.
"அந்த நினைவிடத்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. சிலர் வைத்த தகவல் பலகைதான் பிரச்சினை. உள்ளூர் மக்களுக்கு அதனால் வருத்தம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பலகை அகற்றப்பட்டது. அமைதியை ஏற்படுத்த காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவரும் சமாதானம் அடைந்தனர். ஆனால், வேறு சில அமைப்புகள் வந்தன, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது, " என்கிறார் வது கிராம சபையின் உறுப்பினர் ராம்காந்த் ஷிவலே.
"சத்ரபதி சம்பாஜி மகராஜ் மற்றும் கோவிந்த் கோபால் குறித்த வரலாறு எதுவும் புதிதல்ல. வரலாற்று ஆவணங்கள் அது குறித்துக் குறிப்பிடுகின்றன. அவரது நினைவிடம் அங்கு பல காலமாக உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பபவர்கள், சமூகத்தில் பிளவு உண்டாக நினைக்கிறார்கள்," என்று இந்திய குடியரசு கட்சி (அத்வாலே)-ஐ சேர்ந்த சித்தார்த் தெண்டே.
ஜனவரி 1 நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கு பதற்றத்தைத் தணிக்க போலீசார் முயற்சித்தனர். "நினைவிடத்தில் விழா நடப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன்பே அங்குச் சர்ச்சை நிலவியது. ஆனால் போலீஸ் சரியான நேரத்தில் தலையிட்டது. அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க நாங்கள் முயன்றோம். எனினும், ஜனவரி 1 அன்று அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வன்முறை செய்திருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்," என்கிறார் புனே புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவேஸ் ஹக்.
மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சில இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் 3-4 நாள்கள் முன்பு அங்கு வந்து மற்றவர்களைத் தூண்டி விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சமஷ்த் ஹிந்து அகாதி அமைப்பின் மிலின்ட் ஏக்போட்டே மற்றும் சிவ பிரதிஷ்தான் அமைப்பின் சம்பாஜி பைடே ஆகியோர் மீது வன்முறை மற்றும் கலவரம் செய்ததாக, செவ்வாய் மாலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :