You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தவ் தாக்கரே: சிவசேனை கட்சித் தலைவர் - மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்பு
மகாராஷ்டிரா மாநில முதல்வராக நாளை (நவம்பர் 28) சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் மாலை 6 மணி அளவில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் டிசம்பர் 1-ம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் பதவியேற்பு நடைபெறும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஆனால், அதற்கு பிறகு வந்த தகவல் உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்க மாநில ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று நடந்த சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரினார் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.
முன்னதாக நேற்று பகலில் நான்கு நாட்களுக்கு முன்பு முதல்வராகப் பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகினார்.
பிற்பகல் 3.30 மணிக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிவித்தார். நாளை மாலை 5 மணிக்குள் சட்டமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பட்னவிஸ் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அமைப்பதற்கு போதுமான எம்எல்ஏக்கள் தங்களிடம் இல்லை என்றும் குதிரை பேரத்தில் தாங்கள் ஈடுபட விரும்பவில்லை என்று தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்