அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையிலிருந்த 3 கறுப்பினத்தவர்கள் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையிலிருந்த 3 கறுப்பினத்தவர்கள்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கறுப்பினத்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் ஆல்ஃபிரட், ஆண்ட்ரூ மற்றும் ரான்சம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை 1984 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மூன்று பேரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளனர்.

1983ஆம் ஆண்டு டிவிட் டக்கெட் எனும் பதின்ம வயது சிறுவன் பள்ளி செல்லும் வழியில் கொல்லப்பட்டான். இது அப்போது ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாகத்தான் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரினார்

சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரினார் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.

முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கோதுமை மாவு பாக்கெட்டில் கடத்தப்பட்ட 2,800 ஆமைகள் சிக்கின

சீனாவிலிருந்து இலங்கை வழியாக சுமார் 2,800க்கும் மேலான ஆமைகளை கடத்திய நபரை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். ஆமைகள் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

நவம்பர் 24ஆம் தேதியன்று சீனாவின் குவாங்சோ மாகாணத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் பிடித்து பரிசோதித்தனர்.

7.4 கிலோ சிறுநீரகம்: வெற்றிகரமாக அகற்றிய டெல்லி மருத்துவர்கள்

நோயாளி ஒருவர் உடலில் இருந்து 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை டெல்லி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தோராயமாக பிறந்த குழந்தைகள் இருவரின் எடைக்கு சமம் இது.

பொதுவாக, மனித சிறுநீரகம் 120 முதல் 150 கிராம் எடை இருக்கும். எனவே, இந்தியாவில் மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிக பெரிய சிறுநீரகம் இது என நம்பப்படுகிறது.

சிறுநீரகம் முழுவதும் நீர்கட்டிகள் (cysts) உருவாக காரணமாகிற 'ஆட்டோஸோமல் டொமினன்ட் பாலிசிஸ்டிக்' என்று அழைக்கப்படும் சிறுநீரக நோயால் இந்த நோயாளி துன்பப்பட்டு வந்தார்.

சபரிமலை கோயிலிலுக்குள் முதலில் நுழைந்த பிந்து அம்மினி மீது பெப்பர் ஸ்ப்ரே தாக்குதல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கோயிலுக்குள் நுழைந்த பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி மீது இன்று 'பெப்பர் ஸ்ப்ரே' எனப்படும் மிளகுப் பொடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று காலை கொச்சி காவல் ஆணையர் அலுவலகம் முன்னதாக இந்த தாக்குதல் நடந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: