கோதுமை மாவு பாக்கெட்டில் கடத்தப்பட்ட 2,800 ஆமைகள் சிக்கின

சீனாவிலிருந்து இலங்கை வழியாக சுமார் 2,800க்கும் மேலான ஆமைகளை கடத்திய நபரை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். ஆமைகள் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

நவம்பர் 24ஆம் தேதியன்று சீனாவின் குவாங்சோ மாகாணத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் பிடித்து பரிசோதித்தனர்.

'செக் - இன்' செய்யப்பட்ட அவருடைய பயணப் பொதிகளை சோதித்தபோது அவற்றில் அவர் 2,800க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகளைக் கடத்தி வந்தது தெரிந்தது. இந்த ஆமைக் குஞ்சுகளை அவர் 'குக்கீஸ்' பிஸ்கட் டப்பாக்களிலும் கோதுமை மாவு பாக்கெட்களிலும் அடைத்து கொண்டுவந்திருந்தார். ஒட்டு மொத்தமாக 2,829 ஆமைகளை அந்த நபர் கொண்டுவந்திருந்தார்.

இந்த ஆமைகள் சீனா பாண்ட் ஆமை வகையைச் சேர்ந்தவை. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015-20ன் படி இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டவை. செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த ஆமைகள், மிகக் குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுபவை.

இந்த ஆமைக் குஞ்சுகள் அனைத்தும் அந்த நபர் வந்த விமானத்தின் மூலமே சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. ஆமைகளைக் கடத்திவந்த நபர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

பொதுவாக இந்தியாவில் இருந்துதான் ஆமைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ஆமைகள் கடத்திவரப்படுவது மிகவும் அரிது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுங்கத் துறை அதிகாரிகள் இம்மாதிரி ஆமைகள் கடத்தப்படுவது தொடர்பாக 14 வழக்குகளைப் பதிவுசெய்து, சுமார் 9,000 ஆமைகளை மீட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: