இந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்புகள்: சட்டைக் கிழிப்பு முதல் சிறு சிராய்ப்பும் அற்ற வாக்கெடுப்பு வரை

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற நம்பிக்கை வாக்கெடுப்புகள் இந்திய சட்டமன்றத்துக்கும், ஏன் இந்திய நாடாளுமன்றத்துக்குமே புதிதல்ல.

இந்தியாவில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பல சமயம் நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடந்துள்ளன.

அதில் 6 நம்பிக்கை வாக்கெடுப்புகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.

குண்டர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்த நம்பிக்கை வாக்கெடுப்பு

1987ம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்திற்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெ அணி, ஜா அணி என அதிமுக இரண்டு அணியாக பிரிந்து நின்றது.

முதல்வராகப் பதவியேற்ற ஜானகி எம்ஜிஆர் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது சட்டமன்றமே அல்லோலப்பட்டது.

வெளியிலிருந்து ரவுடிகள் சிலர் சட்டமன்றத்துக்குள் நுழைந்து உறுப்பினர்களை தாக்கியதாகக் கூறப்பட்டது.

சட்டமன்றத்தின் மாண்பு சீர்குலைந்து விட்டதாக இந்திய அளவில் அரசியல் விமர்சகர்கள் விமர்சித்தனர்.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு

சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.

2017ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார்.

அதிமுகவிலிருந்து பிரிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம் அரசுக்கு எதிராக இருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு இது.

இந்த வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது.

மத்திய அரசை கவிழ்த்த நம்பிக்கை வாக்கெடுப்பு

சில நம்பிக்கை வாக்கெடுப்புகள் மாநில அரசை மட்டும் அல்ல, மத்திய அரசை கூட கவிழ்த்திருக்கிறது.

கடந்த 1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிமுகவின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனை அடுத்து வாஜ்பாய் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் முடிவில் வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

இடதுசாரிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு

2008ம் ஆண்டு அமெரிக்காவோடு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அப்போது ஆதரவாக வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அப்போது, இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவரும் மூத்த இடதுசாரி தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

"இன்றோ... நாளையோ"-கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு 

கடந்த 2018 ஜுலை மாதத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமாவால் நெருக்கடி தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். 

இதனால் உண்டான நிலைமையை சமாளிக்க சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். 

நான்கு நாட்களாக ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் விவாதம் நடத்த நாடே பரபரப்பானது. சட்டமன்ற வளாகத்திலேயே இரவு முழுவதும் பல எம்எல்ஏக்கள் தங்கியது தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது.

இறுதியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு இன்றும் உதாரணம் காட்டப்படும் ஜகதாம்பிகா பால் வழக்கு 

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு திடீரென கூட்டணி கட்சியான லோக்தந்திரிக் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொண்டது.

லோக்தந்திரிக் காங்கிரஸ் கட்சிக்கு 22 சட்டமன்ற இருந்ததால் , அரசு பெரும்பான்மையை இழந்தது. மாநில முதல்வராக இருந்த பாஜகவின் கல்யாண் சிங் ஆட்சியை ஆளுநர் பண்டாரி கலைத்தார். 

கல்யாண் சிங் மற்றும் ஜகதாம்பிகா பால் ஆகிய இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கோர, ஆளுநர் எதிர்பாராவிதமாக ஜகதாம்பிகா பாலை முதல்வராக நியமித்தார். 

பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கல்யாண் சிங் வென்றார். இன்றும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் வழக்கு, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சர்ச்சைகளின்போது உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: