ஹிட்லரின் தொப்பியை ஏலம் எடுத்த லெபனான் வணிகர் அப்துல்லா மற்றும் பிற செய்திகள்

ஹிட்லரின் தொப்பியை ஏலம் எடுத்த அப்துல்லா - இதுதான் காரணம்

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஓர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

நாஜிகள் ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக இதனை ஏலத்தில் எடுத்ததாகக் கூறும் அப்துல்லா என்ற இந்த வணிகர், இதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் 300 பணக்காரர்களில் ஒருவரான அவர், ஐரோப்பாவில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். அவர் ஏலம் எடுத்த பத்து பொருட்களில் ஹிட்லர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரம், சிகரெட் பெட்டி மற்றும் ஹிட்லரின் சுயசரிதையான மெயின் கேம்ப் உள்ளிட்டவையும் அடங்கும். அப்துல்லாவின் இந்த செயலை யூதக் குழுக்கள் கொண்டாடுகின்றன.

"162 எம்.எல்.ஏ.க்களை" பத்திரிகையாளர் சந்திப்பில் ஆஜர்படுத்திய சிவசேனை

மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை "162 எம்.எல்.ஏ.க்கள்" திரட்டப்பட்டு பத்திரிகையாளர்கள் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மும்பை கிராண்ட் ஹயாத் ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்தது.

மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாதது எப்படி பாதிக்கும்?

மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் அகில இந்திய நீட் தேர்வில் முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்பு இடங்களுக்கான நீட் தேர்வு ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான இட ஒதுக்கீடு அதில் இடம் பெறவில்லை என்பது பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

ஹாங்காங் தேர்தல்: ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை - அரசுக்கு பின்னடைவா?

ஹாங்காங்கில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் (மாவட்ட கவுன்சில்) முடிவுகளில் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி இயக்கம் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அறிவிக்கப்பட்ட 241 இடங்களில் 201 இடங்களை ஜனநாயக ஆதரவு இயக்கம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள, 'செளத் சீனா' போஸ்ட் நாளிதழ், சீன அரசு ஆதரவு வேட்பாளர்கள் 28 இடங்களை மட்டுமே வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் இந்தியாவில் சம உரிமை பெற்றது எப்படி? - பிபிசியின் சிறப்பு VR படம்

நவம்பர் 25ஆம் தேதி, சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கொண்டாடுகிறது ஐக்கிய நாடுகள் சபை.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை முன்னிலைப்படுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் உடல் ரீதியிலான துன்புறுத்தலுக்கோ அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கோ ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

வாருங்கள்... இந்த ரயில் பயணத்தோடு பிபிசியின் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: