சபரிமலை கோயிலிலுக்குள் முதலில் நுழைந்த பிந்து அம்மினி மீது பெப்பர் ஸ்ப்ரே தாக்குதல்

சபரிமலை

பட மூலாதாரம், Getty Images

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கோயிலுக்குள் நுழைந்த பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி மீது இன்று 'பெப்பர் ஸ்ப்ரே' எனப்படும் மிளகுப் பொடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று காலை கொச்சி காவல் ஆணையர் அலுவலகம் முன்னதாக இந்த தாக்குதல் நடந்தது.

சபரிமலை

பட மூலாதாரம், ANI

அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்புக்கு பிறகு ஜனவரி மாதம் கனகதுர்கா மற்றும் பிந்து அம்மினி ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தனர்.

தற்போது சபரிமலை கோயிலுக்கு செல்ல கொச்சி வந்திருந்த செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாயை காண வந்தபோது பிந்து மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் தாக்குதலுக்கு உள்ளானதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த முறை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற த்ருப்தி தேசாயை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த முறை நிச்சயமாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லப்போவதாகவும் இன்று அரசமைப்புச் சட்ட நாள் என்பதால் இன்றைய நாளை தேர்வு செய்ததாகவும் த்ருப்தி தேசாய் தெரிவித்திருந்தார்.

ஆனால் சபரிமலைக்கு செல்ல இன்று கொச்சி வந்த அவரை விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

சபரிமலை கோயிலில் அனைத்து பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்புக்கு பிறகும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பெரும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், "சபரிமலையில் நிலவும் அமைதியை குலைக்க த்ருப்தி தேசாய் மற்றும் அவர் தலைமையிலான குழு சதி செய்வதாக நான் சந்தேகப்படுகிறேன். அவர் இங்கே வந்தது, சமூக ஆர்வலர் பிந்து அம்மினி மீது தாக்குதல் நடைபெற்றது அனைத்தும் முன்பே திட்டமிட்ட ஒரு விஷயம். இதை அரசு அனுமதிக்காது." என கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty Images

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பின் மீது பல மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நவம்பர் 14ஆம் தேதி இந்த மறு ஆய்வு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த தீர்ப்பின் மீதான மறு ஆய்வு மனுக்கள் குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்த கேரள அரசு சபரிமலை கோயிலுக்குள் செல்ல விரும்பும் பெண்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிட்த்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: